2024 டிசம்பர் மாத நிறைவில் SLT குழுமம் இலாபகரத்தன்மையில் பெரும் அதிகரிப்பு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. உறுதியான தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் நிலையான மற்றும் மொபைல் பிரிவுகளில் வெற்றிகரமான செலவு மேம்படுத்தல்கள் போன்றவற்றுடன், வருடம் முழுவதிலும் மேம்படுத்தப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இந்த பெறுபேறுகளில் பாரிய பங்களிப்பு செலுத்தியிருந்ததாக அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் குழுமம் ரூ. 3.1 பில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக (PAT) பதிவு செய்திருந்தது, 2023 ஆம் ஆண்டில் ரூ. 3.9 பில்லியன் நட்டமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனூடாக ரூ. 7 பில்லியன் எனும் பாரிய வருமான அதிகரிப்பை ஏற்படுத்தியிருந்தது. 2024 ஆம் ஆண்டில் குழுமத்தின் வருடாந்த வருமானம் 4.4% இனால் அதிகரித்து ரூ. 111.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய இலாபம் 19.6% இனால் உயர்ந்து ரூ. 46.1 பில்லியனாக பதிவாகியிருந்தது.
செயற்பாட்டு வினைத்திறனில் குழுமம் மேலதிக கவனம் செலுத்தியிருந்ததனூடாக, செயற்பாட்டு செலவுகள் 4% குறைந்து ரூ. 71.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது EBITDA இல் 23.7% முன்னேற்றத்துக்கு பங்களிப்பு வழங்கி அந்தப் பெறுமதியை ரூ. 40 பில்லியனாக பதிவு செய்திருந்தது. அதுபோன்று, செயற்பாட்டு இலாபம் 172.8% எனும் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை எய்தி ரூ. 11.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. நிதிசார் செலவுகளும் 20.5% இனால் குறைந்து ரூ. 9 பில்லியனாக பதிவாகி, குழுமத்தின் சிறந்த பெறுபேற்றுக்கு பங்களிப்பு செய்திருந்தது.
நான்காம் காலாண்டில் SLT குழுமம் உறுதியான நிதிசார் செயற்திறனுடன், சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. வருமானம் ரூ. 29.1 பில்லியனாக உயர்ந்திருந்தது. 2023 நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 11.9% வளர்ச்சியாகும். 2024 மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1.8% வளர்ச்சியாகவும் அமைந்திருந்தது. கடைசி காலாண்டில் குழுமத்தின் பிரதான குறிகாட்டிகளில் முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டிருந்தன. குழுமத்தின் தேறிய இலாபம் ரூ. 12.9 பில்லியனாக உயர்ந்திருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 50% வளர்ச்சியாகும். 28.9% EBITDA வளர்ச்சி பதிவாகி, ரூ. 11.5 பில்லியனாக காணப்பட்டது. தொழிற்பாட்டு இலாபம் இரண்டு மடங்கிற்கு மேலாக உயர்ந்து ரூ. 4 பில்லியனாக காணப்பட்டது.
அரசாங்க வருமானங்களில் SLT குழுமம் பிரதான பங்களிப்பாளராக திகழ்ந்தது. ரூ. 31.5 பில்லியனை இலங்கை அரசாங்கத்துக்கு (GoSL) வரியாக 2024 ஆம் ஆண்டில் செலுத்தியிருந்தது.
கம்பனி மட்டத்தில், 2024 டிசம்பர் மாதமளவில் SLT உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வருமானம் 2.3% இனால் உயர்ந்து ரூ. 71.3 பில்லியனாக பதிவாகியிருந்தது. கம்பனியின் புரோட்பான்ட் பிரிவு 5.4% இனால் உயர்வடைந்திருந்தது. இதில் FTTH சேவைகள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தன. நிறுவனசார் வருமானம் 11.8% இனால் உயர்ந்திருந்தன. அரச துறை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை பிரிவுகள் முறையே 11.0% மற்றும் 23.6% வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. செலவு கட்டுப்படுத்தல் முயற்சிகளினூடாக குறிப்பிடத்தக்களவு பெறுபேறுகளை எய்த முடிந்திருந்தது. தொழிற்பாட்டு செலவுகளில் 2.2% குறைவை அவதானிக்க முடிந்தது. அதில் AMC செலவுகளில் குறிப்பிடத்தக்களவு சேமிப்பு மற்றும் internet backbone கட்டணங்கள் போன்றன அடங்கியிருந்தன. 2024 நிதியாண்டில் நிறுவனம் ரூ. 2.1 பில்லியனை தேறிய இலாபமாக பதிவு செய்திருந்தது.
2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் SLT வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியது, வருமானம் ரூ. 18.3 பில்லியனை எட்டியது, இது 2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.9% அதிகரிப்பைக் காண்பித்தது. இந்த வளர்ச்சி முதன்மையாக பல வருமான வழிமுறைகளால் உந்தப்பட்டது, புரோட்பான்ட் வருமானம் 10.2% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. இதில் FTTH சேவைகள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தன. நிறுவனசார் துறை வருமானம் 11% அதிகரித்திருந்தது. இதில் வலையமைப்பு, இணையம் மற்றும் நிர்வகிக்கப்பட்ட சேவைகளிலிருந்து அதிகரித்த வருமானம் மூலம் பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. அரசு துறை 14.3% ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் காட்டியது, அதே நேரத்தில் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை துறை வருவாய் 20.9% அதிகரித்துள்ளது.
காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் கணிசமாக மேம்பட்டது, செயல்பாட்டு இலாபம் 17% இனால் அதிகரித்து ரூ. 1.8 பில்லியனாக உயர்ந்தது. இதில், வினைத்திறனான செலவு நிர்வாகம் மற்றும் தேய்மானத்தில் 4.6% குறைப்பு ஆகியன பங்களிப்பு செய்திருந்தன. இதன் விளைவாக, SLT 2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ரூ. 909 மில்லியன் தேறிய இலாபத்தைப் பதிவு செய்தது.
குழுமத்தின் மொபைல் பிரிவான மொபிடெல், 2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. வருமானம் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.4% அதிகரித்து ரூ. 45.8 பில்லியனாக காணப்பட்டது. இதில் புரோட்பான்ட் வளர்ச்சி பங்களிப்பு செலுத்தியது. EBITDA வீதம் 2023 உடன் ஒப்பிடும்போது 30% எனும் கணிச அளவு உயர்ந்து, 9 சதவீத புள்ளி அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. இது வருமான வளர்ச்சி மற்றும் வெற்றிகரமான செலவு மேம்படுத்தல் மூலோபாயங்கள் இரண்டையும் பிரதிபலித்தது. மேலும் சந்தைப்படுத்தல், விநியோகம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும் இலக்கு மேம்படுத்தல்கள் மூலம் இயக்க செலவுகளில் 4.9% குறைப்பால் மேலும் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தது.
மொபிடெல் தனது தொழிற்பாட்டு நட்டத்திலிருந்து மீண்டு, தொழிற்பாட்டு இலாபமாக ரூ. 2.9 பில்லியனை 2024 ஆம் ஆண்டில் பதிவு செய்திருந்தது. 2023ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 3.7 பில்லியன் நட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 0.1 பில்லியனை நேர்த்தியான தேறிய இலாபமாக எய்தியிருந்தது.
2024 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில், மொபிடெல் அதிசிறந்த பெறுபேறுகளை எய்தியிருந்தது. வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.3% அதிகரித்து ரூ. 12.3 பில்லியனாக இருந்தது. EBITDA 137.1% அதிகரித்து ரூ. 4.6 பில்லியனாக இருந்ததுடன், இலாப வீதம் 37% ஆக உயர்ந்தது. தொழிற்பாட்டு இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 478% கணிசமான வளர்ச்சியைக் காட்டி ரூ. 1.8 பில்லியனாக இருந்தது. அதே நேரத்தில் தேறிய லாபம் ரூ. 1.2 பில்லியனை எட்டியது இது 191.8% முன்னேற்றமாகும். தொழிற்பாட்டு செலவுகளில் 12.5% குறைப்பு மற்றும் அனைத்து முக்கிய குறிகாட்டிகளிலும் தொடர்ச்சியான முன்னேற்றத்துடன் காலாண்டு வலுவான முன்னேற்றத்தைக் காட்டியது.
மொபைல் வலையமைப்பு செயற்திறனில் ஒப்பற்ற முன்னோடி எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்யும் வகையில், இலங்கையின் வேகமான மொபைல் வலையமைப்பாக 2024 Ookla® Speedtest Awards™ இல் மொபிடெல் தெரிவாகியிருந்தது. அத்துடன், 2024 நிதிப் பெறுபேறுகளுடன், இந்த சாதனையும் பதிவாகியுள்ளமையானது, வாடிக்கையாளர்களுக்கு பரந்த வலையமைப்பு மற்றும் சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்கான மொபிடெலின் ஒப்பற்ற முயற்சியை வெளிப்படுத்துகிறது.
SLT குழுமத்தின் 2024 நிதிப் பெறுபேறுகள், செயல்பாட்டுத் திறன் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை மையமாகக் கொண்ட மூலோபாய முயற்சிகள் வெற்றிகரமாக செயல்படுத்துவதை பிரதிபலிக்கின்றன. நிலையான மற்றும் மொபைல் செயல்பாடுகள் இரண்டிலும் வலுவான செயல்திறன், செலவு வினைத்திறனைப் பேணி, வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் குழுவின் திறனை வெளிக்காட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி, SLT-MOBITEL தனது டிஜிட்டல் சேவைகள் பிரிவை விரிவாக்கம் செய்வதில் அதிக கவனம் செலுத்துவதுடன், நிலைபேறான வளர்ச்சியை எய்துவதற்காக செயற்பாட்டு வினைத்திறனை பேணுவதிலும் மேலதிக கவனம் செலுத்துகிறது.