தேசிய தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தேசிய நாட்டிலுப்பை மர நடுகைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மெல்சிறிபுர, மதபொல பிரதேசத்தைச் சேர்ந்த உமந்தாவ சர்வதேச பௌத்த கிராமத்தில் அண்மையில் ஆரம்பித்திருந்தது. வளியின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் காலநிலை மாற்றத்தை தடுத்து, நிலைபேறான எதிர்காலத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இந்தத் திட்டத்தை SLT-MOBITEL முன்னெடுக்கின்றது.
இந்த நடவடிக்கையில் SLT-MOBITEL சார்பாக அதன் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்களான, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணத்துக்கான SLT பொது முகாமையாளர் சமந்த ஜயசிங்க, சந்தைப்படுத்தல் சேவைகள் பொது முகாமையாளர் அனுருத்த சூரியாரச்சி, வட மேல் (கிழக்கு மாகாணம்) பிரதி பொது முகாமையாளர் பந்துல விதாரம, சந்தைப்படுத்தல் செயற்படுத்தல்கள் பிரதி பொது முகாமையாளர் ஆன் பெர்னான்டோ, மொபிடெல் பிராந்திய முகாமையாளர் ரன்மல் பொன்சேகா மற்றும் மாவட்ட முகாமையாளர் நிரோஷா கருணாரட்ன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
BG Solar Energy (Pvt) Ltd இன் பொது முகாமையாளர் ரொஹான் குணபால மற்றும் Ekro Lanka Trading முகாமைத்துவ பணிப்பாளர் சுரஞ்சித் தர்மரட்ன ஆகியோரும் இந்த இரண்டாம் கட்ட மர நடுகைத் திட்டத்துக்கு பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், இந்தத் நிகழ்விலும் பங்கேற்றிருந்தனர்.
நாட்டிலுப்பை மரத்தில் காணப்படும் களைகளை கட்டுப்படுத்துவதில் பங்களிப்பு, சேதன உரத் தயாரிப்பில் பயன்படுத்தக்கூடிய தன்மை, வாயு சுத்திகரிக்கும் ஆற்றல் மற்றும் இயற்கை மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரம் என்பதால் இந்த வகை தாவரத்தை மரநடுகைத் திட்டத்துக்காக SLT-MOBITEL தெரிவு செய்திருந்தது. இரண்டாம் கட்டத்தின் கீழ் உமந்தாவ வளாகத்துக்கு நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்து விஜயம் செய்திருந்த 75 பௌத்த பிக்குகளுக்கு நாட்டிலுப்பை மரக் கன்றுகள் வழங்கப்பட்டிருந்தன.
காடழிப்பை தவிர்ப்பது மற்றும் வளியிலிருந்து காபனீரொட்சைட் வாயுவை இயற்கையாகவே அகற்றுவது போன்றன இந்தத் திட்டத்தின் பிரதான உள்ளம்சங்களாகும். பச்சை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பது, சிறந்த வாயு தூய்மையாக்கம், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உயிரியல் பரம்பலை உறுதி செய்தல், அதிகளவு சேதன உரத் தயாரிப்பு மற்றும் நாட்டிலுப்பை மரங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்தத் திட்டத்தினூடாக இலக்கு வைக்கப்பட்டுள்ளன. நாட்டப்படும் ஒவ்வொன்று மரக் கன்றினதும் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கு SLT-MOBITEL இனால் நவீன தொழில்நுட்ப முறைமை பின்பற்றப்படுகின்றது. ‘THURU’ மொபைல் அப்ளிகேஷனினூடாக, இந்தத் திட்டம் எந்தளவு வெற்றிகரமானதாக அமைந்துள்ளது என்பதை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.