Tea Avenue இந்தியாவுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், 2035 ஆம் ஆண்டளவில் 200 நிலையங்களைக் கொண்டிருக்கவும் திட்டம்

Share with your friend

நான்கு தலைமுறைகளாக இயங்கும் பாரம்பரியத்தைக் கொண்ட, இலங்கையின் முன்னணி தேநீர் வர்த்தக நாமமான Tea Avenue, இந்திய சந்தையில் பிரவேசித்துள்ளதாக அறிவித்துள்ளது. Franchise India Group இன் சர்வதேச பிரிவான FranGlobal உடன் மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தி இந்த விஸ்தரிப்புப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இந்த மைல்கல் செயற்பாட்டினூடாக, இலங்கைக்கு அப்பால் Tea Avenue இன் முதலாவது நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகின் அதிகளவு தேநீர் நாட்டம் மிக்க சந்தைகளில் ஒன்றினுள் பிரவேசித்துள்ளதுடன், 2035 ஆம் ஆண்டளவில் 200 க்கும் அதிகமான நிலையங்களைக் கொண்டிருக்கும் சர்வதேச பிரசன்னத்தை ஏற்படுத்தும் நிறுவனத்தின் குறிக்கோளுக்கமைவானதாகவும் அமைந்துள்ளது.

(இடமிருந்து) Tea Avenue பிரதி செயற்பாட்டு முகாமையாளர் அஷான் திசாநாயக்க, செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி முனீஃவ், பிரதம நிறைவேற்று அதிகாரி ஜீவக லியனகே, ஸ்தாபகர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் சஜீவ் டி சில்வா, FranGlobal தவிசாளர் கவ்ரவ் மர்யா, Franchisee ஆலோசகர் நசீர் லதீஃப் மற்றும் Tea Avenue சந்தைப்படுத்தல் முகாமையாளர் கிஹினி ஹிரிம்புரேகம ஆகியோர் காணப்படுகின்றனர்.

2014 ஆம் ஆண்டு, கொழும்பில், டி சில்வா குடும்பத்தினால் நிறுவப்பட்ட Tea Avenue, 1936 ஆம் ஆண்டு வரை வரலாற்றை பின்கொண்டு செல்லும் தேயிலை மரபை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில், பாரம்பரிய தேநீர் வியாபாரம் என்பதிலிருந்து, பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் இணைக்கும் வாழ்க்கைமுறை கஃபே கொள்கையில் பிரவேசித்துள்ளது. விசேடத்துவமான பானங்கள், சிறந்த மெனியு தெரிவுகள் மற்றும் வரவேற்கும் கஃபே சூழல் போன்றவற்றுக்கு புகழ்பெற்றுள்ள Tea Avenue, உள்நாட்டவர்கள் மற்றும் சர்வதேச விருந்தினர்களின் தெரிவுக்குரிய அமைவிடப் பகுதியாக அமைந்துள்ளது.

Tea Avenue ஸ்தாபகர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் சஜீவ் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எமது வர்த்தக நாமம் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள போதிலும், இன்று மக்கள் வாழும் முறையை பிரதிபலிக்கும் பகுதிகளை உருவாக்குவது என்பதைப் பற்றியதாக அமைந்துள்ளது. நாம் எப்போதும் இந்தியாவில் செயற்பாடுகளை விஸ்தரிப்பது பற்றி சிந்தித்ததுண்டு. FranGlobal இன் சென்றடைவுடன், இது ஒரு விரிவாக்கம் மட்டுமன்றி, எமது வரலாற்றுக் கதையின் நீடிப்பாக அமைந்திருக்கும்.” என்றார்.

இந்தியாவில் விஸ்தரிப்பு செயற்பாடுகள் டெல்லி, மும்பை மற்றும் பெங்களுரு ஆகிய நகரங்களில் அடுத்து வரும் 12 முதல் 18 மாதங்களில் Franchise-Owned, Franchise-Operated (FOFO) முறையை பின்பற்றி மேற்கொள்ளப்படும். flagship cafés முதல் சிறியளவிலான விற்பனை நிலையங்கள் மற்றும் ஹோட்டலினுள்ளேயான தேநீர் பகுதிகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும். அதனூடாக, வெவ்வேறு சந்தைகள் மற்றும் முதலீட்டு மட்டங்களுக்கு பொருத்தமான நெகிழ்ச்சித் தன்மையை வழங்கும். கஃபே பிரசன்னத்துடன், Tea Avenue இனால் உயர் தரம் வாய்ந்த வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட தயாரிப்பு தெரிவுகளும் அறிமுகம் செய்யப்படும். அதில், tea tins, curated blends மற்றும் gift sets போன்றன அடங்கியிருக்கும். இவற்றினூடாக, வாடிக்கையாளர்களுக்கு Tea Avenue இன் அனுபவத்தை தமது இல்லங்களுக்கும் கொண்டு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

Tea Avenue பிரதம நிறைவேற்று அதிகாரி ஜீவக லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “ப்ரீமியம் தேநீர் அனுபவங்களுடன், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்த்தக நாமமாக Tea Avenue ஐ நிலை நிறுத்துவது எம் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. வருடாந்தம் 14 மில்லியன் கிலோகிராம்களுக்கு அதிகமான இலங்கை தேயிலை 120 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் Empire Teas குடும்பத்தின் அங்கமாக நாம் திகழும் நிலையில், அந்த சர்வதேச நிபுணத்துவம் மற்றும் சென்றடைவை பயன்படுத்தி முன்னேறக்கூடிய பிரத்தியேகமான நிலையில் நாம் திகழ்கிறோம். 2035 ஆம் ஆண்டளவில், உலகளாவிய ரீதியில் 200 க்கும் அதிகமான நிலையங்களை நிறுவும் இலக்கை நாம் கொண்டுள்ளோம். அதில் இந்தியாவும் முக்கிய அங்கமாக அமைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தினூடாக எண்ணிக்கை மட்டும் பிரதிபலிக்கப்படாமல், உலகின் பிரத்தியேகத்தன்மை, அனுபவம் மற்றும் சர்வதேசத் தன்மை போன்றன எவ்வாறு தேயிலை கலாசாரத்துடன் ஈடுபாட்டைக் கொண்டுள்ளது என்பதை மாற்றியமைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.” என்றார்.Tea Avenue ஐ பொறுத்தமட்டில், இந்தியாவில் பிரவேசிப்பது என்பது ஆழமான கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடையே தேயிலை என்பது பகிரப்பட்ட பாரம்பரியமாக அமைந்திருக்கும் நிலையில், இந்த விரிவாக்கத்தினூடாக, வர்த்தக நாமத்தின் இயற்கையான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. Franchise India Group இன் தவிசாளர் கௌரவ் மர்யா குறிப்பிடுகையில், “தேயிலையுடன் இந்தியா கொண்டுள்ள உறவு செழுமையானது,உணர்வுபூர்வமானது மற்றும் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தது. Tea Avenue என்பது ஒரு கஃபே என்பதற்கு அப்பால், பாரம்பரியம், கலையம்சம் மற்றும் உயர் தர தேநீர் கலாசாரத்துக்கு பசுமையான நோக்கை வழங்கும் அனுபவமாகும். இலங்கையின் இந்த முத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.


Share with your friend