TRI-ZEN வாடிக்கையாளர்களுக்கு ஷரீஆ முறையிலமைந்த நிதித் தீர்வுகள்

Share with your friend

கொழும்பில் நிர்மாணிக்கப்படும் TRI-ZEN வதிவிடத் தொகுதியில் முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஷரீஆ முறையிலமைந்த நிதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக HNB இஸ்லாமிய வங்கிச் சேவைப் பிரிவுடன் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் (JKP) கைகோர்த்துள்ளது.

இந்தக் கைகோர்ப்பினூடாக, இஸ்லாமிய வங்கியியல் நிதிக் கட்டமைப்பினூடாக, போட்டிகரமான அடைமானச் சந்தையில், கவர்ச்சிகரமான கட்டணங்களில் நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், சொத்துக்களின் அடிப்படையில், பங்காண்மை முறையிலமைந்த மாற்று நிதியளிப்பு முறையை வழங்கும்.

இந்தத் திட்டத்துக்காக பயன்படுத்தப்படும் கொள்கையானது “Diminishing Musharakah”எனும் வாடகை அடிப்படையிலான முதலீட்டுத் திட்டமாகும். வாடிக்கையாளர் மற்றும் வங்கி இணைந்து அசையாச் சொத்தில் முதலீடு செய்வர். இதில் வட்டி எனும் அங்கம் உள்ளடக்கப்படாது என்பதுடன், வட்டி தவிர்ப்பு தொடர்பில் நம்பிக்கை கொண்டிருக்கும் நபர்களுக்கும், மாற்று நிதித் தீர்வுகளை நாடுவோருக்கும் கவர்ச்சிகரமான தெரிவாக அமைந்திருக்கும்.

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உப தலைவருமான நதீம் ஷம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் முன்னணி சொத்துக்கள் வடிவமைப்பாளரான ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ், புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதில் எப்போதும் முன்னணியில் திகழ்வதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான நிதித் தீர்வுகளை அறிமுகம் செய்துள்ளோம். ஷரீஆ அடிப்படையிலான நிதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான முதலாவது கைகோர்ப்பாக இது அமைந்திருப்பதுடன், அதற்காக முன்னணி நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் HNB இஸ்லாமிய வங்கியியல் பிரிவுடன் இணைந்துள்ளோம்.” என்றார்.

HNB இஸ்லாமிய வங்கிச் சேவைப் பிரிவின் உதவி பொது முகாமையாளர் ஹிஷாம் அலி கருத்துத் தெரிவிக்கையில், “ஷரீஆ அடிப்படையிலான நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் பல வருட கால அனுபவத்தை HNB இஸ்லாமிய வங்கிச் சேவைப் பிரிவு கொண்டுள்ளது. HNB ஃபினான்ஸின் முழுமையான நிதி வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அதனூடாக, கொழும்பின் மையப்பகுதியில் TRI-ZEN தொடர்மனையை சகாயமான முறையில் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

இலங்கையின் மிகவும் புத்தாக்கமான வங்கியாக ஹற்றன் நஷனல் வங்கி திகழ்வதுடன், இஸ்லாமிய வங்கிச் சேவையை ஆரம்பித்த முதலாவது முன்னணி வங்கியாகவும் அமைந்துள்ளது. HNB இஸ்லாமிய வங்கிச் சேவை தனது செயற்பாடுகளை 2012 ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்ததுடன், செயற்பாடுகளை ஆரம்பித்து இரண்டாம் வருடம் முதல், பல உள்நாட்டு மற்றும் சர்வதேச அமர்வுகளில் பல விருதுகளை சுவீகரித்திருந்தது. சந்தையில் காணப்படும் இஸ்லாமிய வங்கிச் சேவைகளை அதிகளவு நாடும் புத்தாக்கமான வங்கியியல் சேவை வழங்குநராகவும் திகழ்கின்றது.

கொழும்பு 3, மரைன் டிரைவ் பகுதியில் பிரத்தியேகமான அலுவலகத்தைக் கொண்டுள்ளதுடன், அதில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு HNB இஸ்லாமிய வங்கிச் சேவைப் பிரிவு இயங்குகின்றது. கொழும்பு 3 இல் அமைந்துள்ள இஸ்லாமிய வங்கிச் சேவை அலுவலகத்துக்கு அல்லது நாடு முழுவதிலும் காணப்படும் எந்தவொரு HNB கிளைக்கும் வாடிக்கையாளர்கள் விஜயம் செய்து, அதன் உயர் தரம் வாய்ந்த சேவைகளை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.

இந்திரா டிரேடர்ஸ் (பிரைவட்) லிமிடெட் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி ஆகியன இணைந்து TRI-ZEN ஐ நிர்மாணிக்கும் பணிகளை முன்னெடுக்கின்றன. 2023 ஆம் ஆண்டில் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பு 02, யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்படும் இந்த 53 மாடி வதிவிடத் தொகுதியில் 891 ஒற்றை, இரட்டை மற்றும் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட தொடர்மனைகள் அமைந்திருக்கும். இவை மதிநுட்பமான வதிவிட உள்ளம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதுடன், நவீன வசதிகளையும் கொண்டிருக்கும். TRI-ZEN இல் காணப்படும் விசேட உள்ளம்சம் யாதெனில், அதன் போட்டிகரமான விலையிடலாகும். இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட தொடர்மனைகளின் ஆரம்ப விலை ரூ. 35 மில்லியனாகும்.

கொழும்பு 2 இன் மையப்பகுதியில் இந்த தொகுதி அமைந்திருப்பதுடன், பொதுப் போக்குவரத்து வசதிகள், அலுவலகங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவு மற்றும் பானங்கள் மற்றும் விற்பனைத் தொகுதிகள் போன்றவற்றுக்கு இலகுவாக செல்லக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது.

TRI-ZEN தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.trizen.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply