நலிவுற்ற சமூகங்களுக்கு உதவியாக 200,000 அமெரிக்க டொலர் தொகையை வழங்குகிறது
உலர் உணவுப் பொதிகள் மற்றும் முக்கியமான மருந்து வகைகளை வழங்குவதற்கான நன்கொடைகள்
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நலிவுற்ற சமூகங்களுக்கு உதவுவதற்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 200,000 அமெரிக்க டொலர் தொகை நன்கொடையை வழங்குவதாக Uber Sri Lanka இன்று அறிவித்துள்ளது. இந்த நன்கொடைகள் நாடு முழுவதும் உணவு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விநியோகிக்க பயன்படுத்தப்படும்.
Uber விநியோக மற்றும் ஓட்டுநர் பங்காளர்கள் மற்றும் விசாலமான சமூகத்தின் அங்கத்தவர்கள் உட்பட 10,000 க்கும் மேற்பட்ட நபர்கள், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கான அன்றாட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகளைப் பெற்றுக்கொள்வார்கள். மேலும், 30,000 க்கும் மேற்பட்டோருக்கு சேவை செய்யும் 15 கிராமப்புற மருத்துவமனைகள் சர்வதேச வழங்குநர்களிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்யப்படும் அவசரகால மருந்து வகைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய பொருட்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளன.
Uber இன் சார்பில் வருகை தரும் சர்வதேச அதிகாரியும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் விநியோகத்திற்கான பிராந்திய பொது முகாமையாளருமான சஸ்கியா டி ஜோங் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரான ஜகத் அபேசிங்க ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டாண்மை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. Uber Sri Lanka இன் பொது முகாமையாளரான தத்லானி ஜெயவர்தன, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு கிளையின், நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளர் சபைத் தலைமை அதிகாரியான குமாரி கொத்தலாவல ஆகியோரும் இந்நிகழ்வில் வீற்றிருந்தனர்.
Uber ஆசிய பசுபிக் விநியோகத்திற்கான பிராந்திய பொது முகாமையாளரான சஸ்கியா டி ஜோங் அவர்கள் இக்கூட்டாண்மை தொடர்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கையில், “இலங்கை மற்றும் நாங்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாட்டிற்கு இது ஒரு கடினமான காலகட்டம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். மேலும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடனான இந்த கூட்டாண்மையின் மூலம் இந்த நாட்டிற்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையும் அதன் மக்களும் ஆற்றல் நிரம்பியவர்கள், இந்த நெருக்கடியில் இருந்து தேசமும், மக்களும் வலுவாக வெளிப்படுவர்,” என்று குறிப்பிட்டார்.
இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரான ஜகத் அபேசிங்க அவர்கள், “இந்த பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையில் மிகவும் நலிவுற்ற மக்களுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம் தக்க தருணத்தில் இந்த முயற்சியை Uber மேற்கொண்டுள்ளது. அவர்களின் அபிலாஷைகளை வழங்குவதற்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மீது கொண்டுள்ள நம்பிக்கையானது, சங்கம் தேவைப்படும் தருணங்களில் மிகவும் நலிவுற்றவர்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றது என்பதை நிரூபிக்கிறது. இது போன்ற கூட்டாண்மைகள் இன்றியமையாதவை,” என்று குறிப்பிட்டார்.
Uber Sri Lanka மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை தொற்றுநோய் நிலைமையின் போது நாட்டில் தடுப்பூசி ஏற்றும் முயற்சிக்கு ஆதரவாக கைகோர்த்திருந்தன. முன்கள சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் நலிவுற்ற சமூகங்களைச் சார்ந்தவர்கள் தடுப்பூசி ஏற்றும் மையங்களுக்கு கொண்டு செல்வதற்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 50,000 இலவச சவாரிகளை Uber நன்கொடையாக வழங்கியது.
Uber தொடர்பான விபரங்கள்
பிரயாணத்தின் மூலம் வாய்ப்பைத் தோற்றுவிப்பதே Uber இன் நோக்கம். ஒரு பொத்தானைத் தொடுவதால் நீங்கள் எவ்வாறு பிரயாணத்தை மேற்கொள்ளலாம்? என்ற கேள்விக்கு ஒரு எளிய தீர்வுடன் 2010 ஆம் ஆண்டில் நாங்கள் செயற்பட ஆரம்பித்தோம். 15 பில்லியனுக்கும் அதிகமான பயணங்களுக்குப் பிறகு, மக்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு இட்டுச்செல்ல தீர்வுத்திட்டங்களைக் கட்டியெழுப்பி வருகிறோம். நகரங்கள் வழியாக மக்கள் செல்வது, உணவு மற்றும் விடயங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பதை மாற்றுவதன் மூலம், புதிய வாய்ப்புக்களுக்கான உலகிற்கு வழிகோலும் ஒரு தளமே Uber ஆகும்.
இலங்கை செஞ்சிலுவை சங்கம் தொடர்பான விபரங்கள்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் 1936 ஆம் ஆண்டு முதல் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன் நாட்டின் மிகப் பாரிய மனிதாபிமான அமைப்பாகும். 25 மாவட்டங்களிலும் ஒரு விரிவான தன்னார்வத் தொண்டு வலையமைப்பைக் கொண்டு, இது மீள்எழும் திறனைக் கட்டியெழுப்பவும், நலிவுற்ற சமூகங்களின் துன்பத்தைத் தணிக்கவும், பேரழிவுகள், அவசர நிலைமைகள் மற்றும் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.