Uber தனது உலகளாவிய பிரதான நிலைபேற்றியல் தயாரிப்பான Uber Green என்பதை கொழும்பில் அறிமுகப்படுத்துவது குறித்து இன்று அறிவித்துள்ளது. இது சவாரி செல்கின்றவர்கள் தனது Uber செயலியில் ஒரு சில படிமுறைகள் மூலமாக சூழல்நேயம் மிக்க சவாரிகளை முற்பதிவு செய்துகொள்ள இடமளிக்கும். இலங்கையில் 2040 ஆம் ஆண்டளவில் பூஜ்ஜிய உமிழ்வுடனான போக்குவரத்து மாற்றத்திற்கான தனது பயணத்தை விரைவுபடுத்தும் நோக்குடன், இந்நாட்டில் Uber Green மூலமாக, கேட்டுப் பெற்றுக்கொள்ளும் மின்சாரத்தால் இயங்கும் வாகன சவாரிகளை விரிவுபடுத்துவதற்கு Uber திட்டமிட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கான, அங்கிருந்து வருவதற்கான சவாரிகள் அடங்கலாக, சவாரி செல்கின்றவர்கள் நாடெங்கிலும் பசுமை சவாரிகளை தற்போது கேட்டுப் பெற்றுக்கொள்வதற்கு Uber Green ஐ தெரிவு செய்துகொள்ள முடியும். இந்நாட்டிற்கு வருகை தந்த Uber இன் பிரதம நிதி அதிகாரி பிரஷாந்த் மகேந்திர-ராஜா அவர்கள் இப்புதிய சேவை தொடர்பில் அறிவிப்பை வெளியிட்டார்.
Uber இன் பிரதம நிதி அதிகாரி பிரஷாந்த் மகேந்திர-ராஜா அவர்கள் இந்நிகழ்வில் கருத்து வெளியிடுகையில், “2040 ஆம் ஆண்டளவில் எமது தளத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சவாரியையும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் கொண்டதாக மாற்றுகின்ற இலக்கினில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், இலங்கையில் Uber Green ஐ அறிமுகப்படுத்துவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். தற்போது 17வது நாடாக இலங்கை இப்பட்டியலில் சேர்ந்துள்ளதுடன், Uber Green ஐத் தெரிவு செய்வதன் மூலமாக காலநிலை தொடர்பான அவதானம்மிக்க தெரிவை எமது தளத்தில் சவாரி செல்கின்றவர்கள் மேற்கொள்ள முடியும். கூட்டாண்மைகளின் வலிமை மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், நிலைபேணத்தக்க போக்குவரத்தின் மூலமாக காலநிலை மாற்றம் மற்றும் மாசடைதல் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட முயலுகின்ற நகரங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் கைகோர்ப்பதற்கு நாம் திடசங்கல்பம் பூண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
Uber Mobility – Sri Lanka இன் இலங்கைக்கான முகாமையாளர் கௌஷல்யா குணரட்ன அவர்கள் இந்த அறிமுக நிகழ்வில் உரையாற்றுகையில், “எமது நாட்டுக்கு மிகச் சிறந்தவற்றை கொண்டு வர வேண்டும் என்ற எமது முயற்சிகளின் தொடர்ச்சியாக, இலங்கைக்கு Uber Green ஐ அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் அறிமுகம் பரிணாம வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், இந்த சேவையை இன்னும் கூடுதலான நகரங்களுக்கு விரிவுபடுத்தி, இலங்கையில் அதிக எண்ணிக்கையான மக்களுக்கு மின்சாரத்தால் இயங்கும் வாகன சவாரிகள் கிடைக்கப்பெறச் செய்வதில் எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 2030 ஆம் ஆண்டளவிலும், சர்வதேசரீதியாக 2040 ஆம் ஆண்டளவிலும் பூஜ்ஜிய உமிழ்வு கொண்ட போக்குவரத்துத் தளமாக மாறும் அர்ப்பணிப்புடன் Uber உள்ளது. பொது மக்கள் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் பாவனையைக் கைக்கொள்வதுடன் ஒப்பிடுகையில், Uber தளத்தில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் ஓட்டுனர்கள் அவற்றைக் கைக்கொள்வது ஐந்து மடங்காக காணப்படும் அதேசமயம், சாதாரண வாகன ஓட்டுனர்கள் வெளியிடும் உமிழ்வுடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு நன்மைகளை மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் ஓட்டுனர்கள் வழங்குகின்றனர். சவாரி சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்திக் கொள்வதால் கிட்டும் வாய்ப்புக்களை இது சுட்டிக்காட்டுகின்றது. Uber இன் உடனடி மற்றும் நீண்ட கால விஞ்ஞான அடிப்படையிலான உமிழ்வுக் குறைப்பு இலக்குகளை Science Based Targets Initiative அங்கீகரித்துள்ளதுடன், இந்த இலக்குகள் அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முதல் 30 நிறுவனங்களில் ஒன்றாக நாம் மாறியுள்ளோம்.
Uber Green சவாரி ஒன்றுக்கு எவ்வாறு பதிவு செய்வது:
- Uber செயலிக்குள் நுழைந்து, ‘where to’ கட்டத்தினுள் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை உள்ளிடவும்
- திரையின் அடிப்பகுதியிலுள்ள Uber Green ஐத் தெரிவு செய்யவும்
- சவாரிக்கான கட்டணம் அடங்கலாக சவாரிப் பதிவு விபரங்களை சரிபார்த்து Confirm Green என்பதைத் தெரிவு செய்யவும்
- சவாரியை அனுபவித்து மகிழவும்
Uber தொடர்பான விபரங்கள்
நகர்வின் மூலமாக வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதே Uber இன் இலக்கு. பொத்தான் ஒன்றை அழுத்துவதன் மூலமாக சவாரியொன்றை எவ்வாறு இலகுவாக மேற்கொள்ள முடியும் என்ற எளிய பிரச்சனைக்கான தீர்வை வழங்குவதற்காக 2010 ஆம் ஆண்டில் எமது சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 25 பில்லியனுக்கும் மேற்பட்ட சவாரிகளுடன், மக்களுக்கு தாங்கள் விரும்புகின்றவற்றை தமக்கு அருகிலேயே பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். நகரங்கள் மத்தியில் எவ்வாறு மக்கள், உணவு மற்றும் பொருட்கள் நகர்கின்றன என்பதை மாற்றியமைத்து, புதிய வாய்ப்புக்களுக்கு வழிகோலுகின்ற ஒரு தளமாக Uber மாறியுள்ளது. இலங்கையில் 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Uber Rides சேவை, தற்போது இலங்கையின் ஐந்து முக்கிய மாவட்டங்களில் கிடைக்கப்பெறுவதுடன், அதன் பல்வகைப்பட்ட சேவைகளின் கீழ், இரு சக்கர, முச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்து தெரிவுகளை வழங்குகின்றது.
புகைப்படத்தில் காணப்படுபவர்கள்: இடமிருந்து வலப்புறமாக – வருண் விஜேவர்த்தன, இலங்கைக்கான முகாமையாளர், Uber Delivery – Sri Lanka; சனத் ஜெயசூரிய, கிரிக்கெட் மேதை மற்றும் Uber Green இல் பூஜ்ஜிய உமிழ்வுடன் சவாரி செய்யும் முதலாவது நபர்; பிரஷாந்த் மகேந்திர-ராஜா, பிரதம நிதி அதிகாரி, Uber; மற்றும் கௌஷல்யா குணரட்ன, இலங்கைக்கான முகாமையாளர், Uber Mobility – Sri Lanka.