இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் அண்மையில் இடம்பெற்ற Women in Management (WIM) மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் (SLIM) SLIM DIGIS 2.1 விருதுகள் வழங்கும் நிகழ்வுகளில் விருதுகளை சுவீகரித்திருந்தது. 40 வருட காலப் பகுதியில் பின்தங்கிய நிலையில் காணப்படும் குடும்பங்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரினது வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த விருதுகளை சுவீகரித்துள்ளமை மற்றுமொரு மைல்கல்லாகும். பெண்கள் வலுவூட்டலில் சிறந்த அரச சார்பற்ற நிறுவனம் / சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் எனும் விருதை சுவீகரித்திருந்ததுடன், அரச சார்பற்ற நிறுவனங்கள் வரிசையில் வர்த்தக நாம விழிப்புணர்வுக்கான வெண்கல விருதையும், முறையே சுவீகரித்திருந்தது.
இந்த விருதுகளை சுவீகரித்திருந்தமை தொடர்பில் இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் தேசிய பணிப்பாளர் திரு. திவாகர் ரட்ணதுரை கருத்துத் தெரிவிக்கையில், “இரு சிறந்த விருதுகள் பற்றிய அறிவிப்புடன் வருடத்தை ஆரம்பிக்க முடிந்தமை உண்மையில் மிகவும் பெருமையாக உள்ளது. நிறுவனம் எனும் வகையில், பின்தங்கிய குடும்பங்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புகளை நாம் கொண்டுள்ளோம். எமது புத்தாக்கத்தில் ஒன்றான சமூக நிகழ்ச்சிகளினூடாக, இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் பின்தங்கிய பெண்கள் மற்றும் சிறுமிகளை வலுவூட்டுவதில் முன்னணியில் திகழ்கின்றது. இந்த நிகழ்ச்சிகளில், குடும்பத்தைப் போன்ற பராமரிப்பு, குடும்ப வலுவூட்டல் மற்றும் தொழிற்பயிற்சி போன்றன அடங்கியுள்ளன. எமது முயற்சிகளுக்கு கௌரவிப்பு கிடைத்துள்ளமை உண்மையில் பெருமை சேர்ப்பதுடன், சமூகத்திற்க்கான எமது சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.
இலங்கை SOS சிறுவர் கிராமங்களின் தொழிற் பயிற்சி நிகழ்ச்சிகளினூடாக, இளம் வயதைச் சேர்ந்த இருபாலாருக்கும் இலவச தொழிற்கல்வி வழங்கப்படுகின்றது. அதனூடாக அவர்களுக்கு தமக்கு வேண்டிய தொழில் நிலையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இலங்கையின் நான்கு SOS தொழிற்பயிற்சி நிலையங்களினூடாக வழங்கப்படும் நிபுணத்துவ வளர்ச்சிக்கான வழிகாட்டல்களின் பயனை பல இளம் பராயத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர்.
திரு.திவாகர் ரட்ணதுரை தொடர்ந்து குறிப்பிடுகையில், “சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது மாற்றத்துக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளன என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, பல்வேறு ஊடக கட்டமைப்புகளினூடாக வழிகாட்டல்களை முன்னெடுப்பதில் நிறுவனம் தன்னாலான இயன்ற பங்களிப்பை வழங்குகின்றது. எமது விழிப்புணர்வு நடவடிக்கைகளின் பிரதான நோக்கம் என்பது, இலங்கையில் சிறுவர் கிராமங்களினூடாக சமூகப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஆதரவளிக்கக்கூடிய நன்கொடை வழங்குநர்கள் மற்றும் நலன்விரும்பிகளை தேடியறிவதில் முக்கிய பங்காற்றும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
இலங்கை SOS சிறுவர் கிராமங்களினூடாக நாடு முழுவதையும் சேர்ந்த ஆறு சிறுவர் கிராமங்கள் மற்றும் இளைஞர் இல்லங்களின் சுமார் 900 சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பராமரிப்பு வழங்கப்படுகின்றது. தற்போது, குடும்ப வலுவூட்டலினூடாக, 1,660 பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு கல்வி, தொழில் நிலை விருத்தி மற்றும் போஷாக்கு போன்ற பிரிவுகளில் தேர்ச்சியடைய உதவுகின்றது. பின்தங்கிய குடும்பங்களுக்கு சமூகத்தில் உறுதியாகவும் சுயாதீனமாகவும் திகழ்வதற்கு இந்த நிகழ்ச்சி பல வசதிகளை வழங்குகின்றன. தற்போது, நாடு முழுவதிலும் ஒன்பது வெவ்வேறான பகுதிகளில் வழங்கப்படும் இந்த நிகழ்ச்சியினூடாக 47 சமூகங்கள் பயன் பெறுகின்றன. தையல், விலங்கு வளர்ப்பு, தென்னந் தும்பு கயிறு உற்பத்தி, ஊதுபத்தி தயாரிப்பு, காளான் வளர்ப்பு மற்றும் இதர சுய தொழில் திறன்கள் போன்றன இந்த நிகழ்ச்சியினூடாக மேற்கொள்ளப்படுகின்றன.