- DFC பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன், பெண் தொழில்முயற்சியாளர்கள், நிலைபேறான நிதியளிப்பு மற்றும் நுண், சிறிய மற்றும் மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு (MSMEs) உதவ வேண்டிய தேவை பற்றி வலியுறுத்தியிருந்தார்.
- பிரதம நிறைவேற்று அதிகாரி நேதன் கைச்சாத்திட்டிருந்த உடன்படிக்கையினூடாக, CDB இன் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் அந்தஸ்து மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் (DFC) பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் கொழும்புக்கு நவம்பர் 7-8 காலப்பகுதியில் விஜயம் செய்திருந்த போது, பெண் தொழில்முயற்சியாளர்கள், நிலைபேறான நிதியளிப்பு மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு (MSMEs) ஆதரவளிக்கும் வகையில் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் இந்த அர்ப்பணிப்புக்கான உறுதிப்படுத்தும் கைச்சாத்திடல் DFC இன் சார்பாக பிரதம நிறைவேற்று அதிகாரி நேதன் மற்றும் CDB சார்பாக முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் நானயக்கார ஆகியோரிடையே கைச்சாத்திடப்பட்டிருந்தது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் USAID குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் கேப்ரியல் கிரவு ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்று, இலங்கையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வலுவூட்டலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படுவதை உறுதிப்படுத்தியிருந்தனர்.
முதன் முறையாக, இந்தளவு உயர் பெறுமதியான நிதி வசதியை CDB பெற்றுக் கொண்டுள்ளதுடன், கூட்டாண்மை செயற்பாடுகளில் நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பு மீள உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், நிதியளிப்பு முகவர் அமைப்புகளால் CDB இன் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு இந்த கடன்வசதியளிப்பு முன்னுதாரணமாக அமைந்துள்ளதுடன், உறுதித்தன்மை, ஆளுகை மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றுக்கு நிறுவனத்தின் பங்களிப்புகளையும் ஏற்றுக் கொள்வதாக அமைந்துள்ளது. இந்த கொடுக்கல் வாங்கலுக்கு கட்டமைப்பு முகவர் மற்றும் ஆலோசகராக Emerging Markets Global Advisory LLP செயலாற்றியிருந்தது.
DFC பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் கருத்துத் தெரிவிக்கையில், “சிறு வியாபாரங்கள் மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு உள்ளடக்கமான, நிலைபேறான நிதியளிப்பை DFC வழங்குகின்றது. CDB சிறந்த பங்காளராக அமைந்திருப்பதுடன், எமது ஆதரவினூடாக, இலங்கையில் வலுப் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன், காலநிலை எதிர்த்தாக்கு தன்மையை ஊக்குவிக்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு ஐக்கிய அமெரிக்கா தன்னை அர்ப்பணித்துள்ளது. அதற்காக நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பிரதான பங்களிப்பாளர்களான உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் நிறுவனத்தில், USAID உடன் இணைந்து DFC இன் புதிய முதலீடு, நாடு முழுவதையும் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு நேரடியான பயனளிக்கும் வகையில் அமைந்திருக்கும். அதனூடாக இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு மூலதனத்தை திரட்டிக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், தமது சிந்தனைகளை வெற்றிகரமான வியாபார வளர்ச்சியில் ஈடுபடுத்தக்கூடியதாகவும் இருக்கும். இது நீண்ட கால அடிப்படையில் நாட்டின் நிலையான பொருளாதாரத்துக்கு வழிகோலும்.” என்றார்.
USAID குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் கேப்ரியல் கிரவு கருத்துத் தெரிவிக்கையில், “இந்த கடன் வசதியை பயன்படுத்துவதற்கு CDB திட்டமிட்டுள்ள நிகழ்ச்சி நிரல், இலங்கையில் ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் சிலதை நிறைவேற்றுவதற்கு உதவியாக அமைந்திருக்கும். மிக முக்கியமாக, நிதியளிப்பினூடாக பெண் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டப்படும். அதனூடாக நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை நிஜமாக்கிக் கொள்ள முடிவதுடன், பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதோடு, உறுதியான, மீண்டெழக்கூடிய சமூகங்களை கட்டியெழுப்பவும் உதவும். பசுமை பொருளாதாரத்தை வலிமைப்படுத்துவதற்காகவும், பெண் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்காகவும் முன்னெடுக்கப்படும் CDB இன் முதலீட்டு செயற்பாடுகளுடன் கைகோர்ப்பதையிட்டு USAID பெருமை கொள்கின்றது.” என்றார்.
USAID இன் பங்களிப்புடன் வழங்கப்படும் இந்த கடன் வசதியினூடாக, நகர நிதியளிப்பு மற்றும் கிராமிய கடன் வழங்கல் போன்றவற்றுக்கு CDB இன் ஆதரவினூடாக, ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நிறைவேற்றுவதற்கு பங்களிப்புச் செய்யும். பெண்களுக்கு வலுவூட்டல் மற்றும் பாலின சமத்துவம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை இந்தத் திட்டம் உணர்த்துவதுடன், நுண் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு வலுச்சேர்த்து நிலைபேறான சமூகங்களை கட்டியெழுப்புவதில் காணப்படும் தடைகளை இல்லாமல் செய்வதில் கவனம் செலுத்தும். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் காணப்படும் “No Poverty” மற்றும் “Zero Hunger” போன்ற அம்சங்களை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தும்.
கூட்டாண்மை வழிநடத்தல் மற்றும் நிலைபேறாண்மைக்காக இலங்கை வர்த்தக சம்மேளனத்திடமிருந்து CDB தொடர்ச்சியாக பெற்றுக் கொண்ட கௌரவிப்புகள் பற்றி நானயக்கார குறிப்பிடுகையில், “பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவது எனும் எமது கொள்கையை நாம் தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றோம். ஏனெனில் சர்வதேச காலநிலை மாற்ற செயற்பாட்டில் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். ஆரம்பநிலை நிறுவனங்கள், ஏற்கனவே காணப்படும் வியாபாரங்களை விஸ்தரிப்பது மற்றும் சிறு வியாபாரங்களை பசுமைக் கட்டமைப்பில் விருத்தி செய்யும் வகையில் வருமானத்தை மீள முதலீடு செய்வது போன்றன அடங்கலாக தேவைகளுக்கு எமது நிதிச் சேவைகளை வழங்குவதனூடாக, நிதிச் சேவைகள் துறையில் பொறுப்பு வாய்ந்த சேவை வழங்குநராக எமது பிரசன்னத்தை நாம் உறுதி செய்வது மாத்திரமன்றி, நாடு முழுவதிலும் நிதிசார் உள்ளடகத்தை ஊக்குவிக்கும் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகனாகவும் திகழ்கின்றமை இலக்காக அமைந்துள்ளது.” என்றார்.
காபன் வெளியீட்டை குறைக்கும் வகையில், Roof Solar கட்டமைப்புகள், மின் மற்றும் Hybrid வாகனங்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக மாற்றியமைத்தல் போன்றன அடங்கலாக பசுமை வலுத்திட்டங்களில் CDB கவனம் செலுத்தும். ஐக்கிய நாடுகளின் தூய வலு SDG க்கான CDB இன் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துவதுடன், வலு முகாமைத்துவத்தில் சிறந்த செயன்முறைகளுக்கான தேவையையும் உணர்த்துகின்றது. தனது நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலுக்கு CDB தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளதுடன், 2030 ஆம் ஆண்டளவில் net zero நிறுவனமாக திகழ்வதிலும் கவனம் செலுத்துகின்றது.
நானயக்கார மேலும் குறிப்பிடுகையில், “CDB இன் நிதிசார் வலிமைக்கு இந்த வசதி மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்திருப்பதுடன், நாட்டின் சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் பங்களிப்புச் செய்யும். கூட்டாண்மை முன்னோடியாக திகழும் நிலையில், முழுத் தோற்றத்தை பார்வையிட்டு, நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைந்திருப்பதை உறுதி செய்வது எமது பொறுப்பாகும்.” என்றார்.
DFC பற்றி
அபிவிருத்தியடைந்து வரும் உலகில் எதிர்கொள்ளும் பாரதூரமான சவால்களுக்கு நிதித் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காக தனியார் துறையுடன் கைகோர்த்து ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (DFC) செயலாற்றுகின்றது. வலு, சுகாதார பராமரிப்பு, உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் சிறு வியாபாரங்கள் மற்றும் நிதிச் சேவைகள் போன்ற துறைகள் அடங்கலாக பல்வேறு துறைகளில் நாம் முதலீடுகளை மேற்கொள்கின்றோம். உயர் நியமங்களை பின்பற்றுவதாகவும், சூழலுக்கு, மனித உரிமைகள் மற்றும் ஊழியர் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதாகவும், DFC முதலீடுகள் அமைந்துள்ளது.
USAID பற்றி
உலகின் முன்னணி சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்புகளில் ஒன்றாகவும், அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி பிரிவாகவும் USAID திகழ்கின்றது. ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் USAID இயங்குவதுடன், சுகாதாரம், கல்வி மற்றும் கற்றறிந்த குடிமக்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகின்றது. 1956 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசாங்கத்தினால் 600 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை இலங்கையில் அபிவிருத்தி மற்றும் மனிதநேய உதவியாக வழங்கப்பட்டுள்ளது. USAID இன் பணி தொடர்பில் மேலதிக தகவல்களை பார்வையிட usaid.gov/sri-lanka எனும் இணையத்தளத்தை பார்க்கவும் மற்றும் @USAIDSriLanka ஐ தொடரவும்.
CDB பற்றி
இலங்கையில் காணப்படும் சிறந்த ஐந்து வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) திகழ்கின்றது. நாட்டில் காணப்படும் மிகவும் புத்தாக்கமான நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக அமைந்திருப்பதுடன், நிலைபேறாண்மைக்கு உறுதியான அர்ப்பணிப்பு, சிறந்த கூட்டாண்மை ஆளுகை, பொறுப்புக்கூரல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றையும் கொண்டுள்ளது. தொழில்நுட்பசார் புத்தாக்கங்களினூடாகவும், நவீன நிதித் தீர்வுகளினூடாகவும் நிதிச் சேவைகள் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளமைக்காக புகழ்பெற்றுள்ளது.
படங்கள் 01: DFC உடனான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில், DFC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் மற்றும் CDB இன் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் நானயக்கார ஆகியோர் காணப்படுகின்றனர். அருகில் இடமிருந்து, USAID இலங்கைக்கான குழுவின் பணிப்பாளர் கேப்ரியல் கிரவு, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் CDB தவிசாளர் அலிஸ்டெயார் கொரேரா ஆகியோர் காணப்படுகின்றனர்.
படங்கள் 02: அமெரிக்காவின் அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் CDB உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. இந்த உடன்படிக்கையில், DFC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் மற்றும் CDB இன் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் நானயக்கார ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர். நடுவில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் காணப்படுவதுடன், இடது பக்கத்தில் USAID இலங்கைக்கான குழுவின் பணிப்பாளர் கேப்ரியல் கிரவு மற்றும் CDB தவிசாளர் அலிஸ்டெயார் கொரேரா ஆகியோர் காணப்படுகின்றனர்.