எப்போதும் ஃபன் நிறைந்த Chupa Chups தற்போது இலங்கையில் தயாரிக்கப்படுகின்றது

Share with your friend

உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற மற்றும் அதிகளவு விரும்பப்படும் இனிப்புப் பண்ட வர்த்தக நாமமான Chupa Chups ஐ இலங்கையில் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக Perfetti Van Melle Lanka (Private) Ltd. அறிவித்துள்ளது. இதன் மூலம் Chupa Chups ஐ உற்பத்தி செய்யும் 7ஆவது நாடாக இலங்கை திகழ்கின்றது. எப்போதும் ஃபன் ஆக திகழும் இனிப்புப் பண்ட வர்த்தக நாமத்தின் உரிமையாண்மையை PVM குரூப் கொண்டுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. சீதுவ பகுதியில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் உற்பத்தித் தொழிற்சாலையில் இதன் உற்பத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

1958 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய ரீதியில் நுகரப்படும் புகழ்பெற்ற ஸ்பெய்ன் நாட்டின் லொலிபொப் வர்த்தக நாமம், இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவது, முழு நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது. தற்போது Chupa Chups உற்பத்திப் பணிகள் ஸ்பெய்ன், ரஷ்யா, சீனா, மெக்சிகோ, வியட்நாம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன என நிறுவனம் அறிவித்துள்ளது.

Perfetti Van Melle Lanka (Private) Ltd. இன் இலங்கைக்கான முகாமையாளர் மோஹித் பஹல்லா கருத்துத் தெரிவிக்கையில், “பெருமளவு முதலீட்டில் எமது உற்பத்தித் தொழிற்சாலையை இலங்கையில் நிறுவியது முதல் பல புதிய மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகளை Perfetti Van Melle இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இலங்கையில் நாம் இயங்கும் 15 வருட காலப் பகுதியில் நிறுவனத்தின் மாபெரும் முதலீடாக Chupa Chups உற்பத்தித் தொகுதி நிறுவியுள்ளதை குறிப்பிட முடியும். எமது இதர புகழ்பெற்ற வர்த்தக நாமங்களான Center Fresh, Alpenliebe மற்றும் Mentos ஆகியவற்றுடன் சீதுவயில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இதன் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் Chupa Chups, நுகர்வோருக்கு சிக்கனமான விலையில் கிடைப்பதுடன், இறக்குமதி செய்யப்படும் விலையை செலுத்த வேண்டியதில்லை.” என்றார்.

160 க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனையாகும், 100க்கும் மேற்பட்ட சுவைகளைக் கொண்ட Chupa Chups, என்ரிக் பேர்னாட்டின் கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது. சிறுவர்கள் இனிப்புப் பண்டங்களை உண்ணும் போது கைகளில் ஒட்டும் தன்மையற்ற வகையிலமைந்த ஒரு இனிப்புப் பண்டத்தை தயாரிக்க வேண்டும் என பேர்னாட் எண்ணினார். அதன் விளைவாக, 1958 ஆம் ஆண்டில் ஸ்பெய்னில் முதலாவது லொலிபொப் தயாரிப்பை கண்டுபிடித்தார். 1963 ஆம் ஆண்டில் Chupa Chups வர்த்தக நாமப் பெயர் சூட்டப்பட்டது. 1969 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற Chupa Chups வர்த்தகச் சின்னத்தை பத்திரிகைக் கடதாசி ஒன்றில் புகழ்பெற்ற ஓவியக் கலைஞரான சல்வடோர் டாலி வரைந்திருந்தார். அதன் மூலம் ஆரம்பத்திலிருந்து இந்த வர்த்தக நாமம் சிறப்பம்சங்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது.

PVM குரூப் தனியார் உரிமையாண்மையில் இயங்கும் சர்வதேச நிறுவனமாகத் திகழ்வதுடன், இனிப்புப் பண்டங்கள் மற்றும் சுவிங்-கம் தயாரிப்புகளை உற்பத்தி செய்து 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. PVM குரூப், தனது 100% உரிமையாண்மையைக் கொண்ட துணை நிறுவனமான Perfetti Van Melle Lanka (Pvt.) Ltd. ஊடாக சீதுவயில் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை 2007 ஆம் ஆண்டில் நிறுவியிருந்தது. அன்று முதல் உள்நாட்டு சந்தைக்கான இனிப்பு பண்டங்களை உற்பத்தி செய்து விநியோகித்து வருகின்றது. இலங்கையில், Mentos, Center Fruit, Center Fresh, Center Shock, Alpenliebe, Chupa Chups, Happydent மற்றும் Big Babol ஆகிய நாமங்களிலமைந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்துகின்றது. கடந்த 15 வருடங்களில், இலங்கையின் இனிப்புப் பண்டங்கள் துறையில் முன்னோடியாக PVM ஸ்ரீ லங்கா வளர்ச்சி கண்டுள்ளதுடன், தனது தயாரிப்புகளினூடாக நாளாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோரை மகிழ்ச்சிக்குட்படுத்தி வருகின்றது.


Share with your friend