சர்வதேச சந்தைகளுக்கான இலங்கையின் ஏற்றுமதிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடனான (NCE) தந்திரோபாய பங்காண்மையை மீளமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அன்புடன் அரவணைக்கும் வங்கி செலான் வங்கி பிஎல்சி கைச்சாத்திட்டிருந்தது. நீண்ட கால பயணத்தில் முதல் படியை எடுத்து வைக்கும் வகையில், 2022 பெப்ரவரி 10 ஆம் திகதி இந்த உடபடிக்கை இருதரப்பினருமிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த தந்திரோபாய கைகோர்ப்பினூடாக, சம்மேளனத்தின் அங்கத்தவர்களின் வெளிநாட்டு சந்தைகளில் காலடி பதிக்கும் அல்லது ஏற்கனவே காணப்படும் சந்தைப் பங்கினை விரிவாக்கம் செய்யும் ஏற்றுமதிப் பணிகளுக்கு செலான் வங்கி ஆதரவளிக்கும்.
ஏற்றுமதியில் ஈடுபடும் ஆரம்பநிலை நிறுவனங்கள் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு நிதிச் சேவைகள் மற்றும் ஆலோசனைகளை வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அந்நியச் செலாவணி வருமானம் என்பது அத்தியாவசிய தேவையாக அமைந்திருக்கும் நிலையில், இந்தப் பங்காண்மையினூடாக, இலங்கையின் ஏற்றுமதியை கட்டியெழுப்பி அதனூடாக உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகள்/சேவைகளை சர்வதேச சந்தைக்கு கொண்டு சென்று, அதனூடாக அந்நியச் செலாவணி வருமானத்தை அதிகரித்து, நாட்டுக்கு நிதி உறுதித்தன்மையை எய்துவதற்கு உதவியாக அமைந்திருக்கும். எனவே, நீண்ட காலம் நிலைத்திருக்கும் பங்காண்மையினூடாக, ஒட்டுமொத்த ஏற்றுமதிகளுக்கு பெறுமதி சேர்ப்பதுடன், பொருளாதார உறுதித்தன்மையையும், நாட்டின் மீண்டெழுந்தன்மைக்கும் பங்களிப்பு வழங்கப்படும்.
இந்தப் பங்காண்மையினூடாக, NCE அங்கத்தவர்களுக்கு செலான் வங்கியினால் வழங்கப்படும் பல ஏற்றுமதி சார் சேவைகள் மற்றும் தீர்வுகள் பற்றி அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், அவற்றைப் பயன்படுத்தி சர்வதேச சந்தைகளில் தமது பிரசன்னத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். நாட்டுக்கு, NCE அங்கத்தவர்களுக்கு மற்றும் வங்கிக்கு பல்வேறு வழிகளில் உதவும் நல்லொழுக்கமான சுழற்சியை உருவாக்கும்.
இந்தப் பங்காண்மையினூடாக, ஏற்றுமதியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரத்தியேகமான சம்மேளனம் எனும் வகையில் NCE இனால், அதன் அங்கத்தவர்களுக்கு ஆதரவளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், வங்கிக்கு தொடர்பாடல்களை பேணுவதற்கு உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். NCE வருடாந்த விருதுகள் வழங்கல் அடங்கலாக எம்மால் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளினூடாக, செலான் வங்கி மற்றும் சம்மேளனத்தின் ஏற்றுமதி அங்கத்தவர்களுக்கு ஆதரவளிப்பது என்பது எமது இலக்காக அமைந்துள்ளது என சம்மேளனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் ஏற்றுமதியாளர்களை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதற்காக தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடன் செலான் வங்கி கைகோர்த்துள்ளதையிட்டு பெருமை கொள்கின்றது. நாட்டின் ஏற்றுமதி துறையை ஊக்குவிப்பதற்கு வங்கி தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிப்பது, கட்டியெழுப்புவது மற்றும் நிலைத்திருக்கச் செய்யும் வங்கியின் பன்முனை செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. அவர்களுக்கு அனுகூலம் வழங்கக்கூடிய பல்வேறு வங்கியியல் சேவைகளை நாம் எம்வசம் கொண்டுள்ளோம்.” என்றார்.
அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான கணக்குகள் மற்றும் வகுப்பில் சிறந்த சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன் செயல்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, நாடு முழுவதிலும் 540 க்கும் அதிகமான வாடிக்கையாளர் தொடர்பு கொள்ளும் அலகுகளைக் கொண்டுள்ளது. பிற்ச் மதிப்பீடுகளால் செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A’(lka) ஆக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனூடாக செயல்திறன் சிறப்பைக் கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.
இலங்கையின் தேசிய ஏற்றுமதி சம்மேளனம் என்பது ஏற்றுமதித் துறைக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதற்கு பொறுப்பாக இயங்கும் முன்னணி சம்மேளனமாக அமைந்துள்ளது. சம்மேளனத்தில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் இலங்கையின் சகல தயாரிப்புகள் மற்றும் சேவைகள் துறைகளைச் சேர்ந்த பாரியளவு முதல் சிறிய ஏற்றுமதி சார் நிறுவனங்களைச் சேர்ந்த முன்னணி ஏற்றுமதியாளர்களாக திகழ்கின்றனர்.