2023 ஜனவரி 20 ஆம் திகதி, டியுலக்ஸ் பெயின்ட் உற்பத்தியாளரும், முன்னணி சர்வதேச பெயின்ட் மற்றும் மேற்பூச்சு வகைகள் உற்பத்தி நிறுவனமுமான AkzoNobel பெயின்ட்ஸ், தொடர்ச்சியான 5 ஆவது வருடமாகவும் இலங்கை SOS சிறுவர் கிராமங்களுடன் ஒப்பந்தத்தை புதுப்பித்திருந்தது.
24 பங்கேற்பு நாடுகளுடனான இந்த சர்வதேச பங்காண்மையானது, AkzoNobel இன் ‘Let’s Colour’திட்டத்தின் அங்கமாக அமைந்துள்ளதுடன், இளைஞர் தொழில் வாய்ப்பின்மை தொடர்பான பிரச்சனைக்கு நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வி மற்றும் புதுப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. உறுதியற்ற பின்புலத்தைச் சேர்ந்த இளம் வயதினரின் பணி வாய்ப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிகளில் நிபுணத்துவ பெயின்ட் பூச்சு மற்றும் புதுப்பித்தல், தொழில் முயற்சியாண்மை மற்றும் மென் திறன் விருத்தி ஆகியன தொடர்பில் ஆலோசனை மற்றும் பயிற்சிகள் வழங்கலினூடாக, தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் வசதிகளை மேம்படுத்தி, சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த நிலைகளை வகிக்கக்கூடிய சுயாதீனமான வயதுவந்தவர்களை கொண்டிருப்பதற்கு பங்களிப்பு வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.
பெயின்ட் பூச்சின் வலிமையை மேலும் வலியுறுத்தும் வகையில், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பத்தாரின் வசிப்பிடங்களை மேம்படுத்துவதற்காக டியுலக்ஸ் பெயின்ட் வகைகளை கையளிக்கும் நடவடிக்கைகளும் அடங்கியிருந்தன. AkzoNobel ஊழியர் தன்னார்வ செயற்பாட்டாளர்களின் ஆதரவுடன், இந்தப் பங்காண்மையினூடாக, SOS கிராமங்களைச் சேர்ந்த இளம் வயதினருக்கு ஆலோசனை வழங்கல் மற்றும் ஊக்குவிப்பு வழங்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த கைகோர்ப்பினூடாக நேரடித் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன், AkzoNobel இனால் இரு இளம் வயதைச் சேர்ந்தவர்கள், SOS கிராமத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்தப் பங்காண்மை ஆரம்பம் முதல், 34000 க்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் இளம் வயதைச் சேர்ந்தவர்கள் உலகளாவிய ரீதியில் பயன் பெற்றுள்ளனர். 9400 க்கு அதிகமான இளம் வயதைச் சேர்ந்தவர்கள் உத்தியோகபூர்வமாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் மாத்திரம் சுமார் 700 சிறுவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், தொழில் புரியக்கூடிய குடிமக்களாகவும், நாட்டின் பொருளாதாரத்துக்கு உற்பத்தித்திறனான பங்களிப்பை வழங்கக்கூடிய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
AkzoNobel ஸ்ரீ லங்காவின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி உபேந்திர குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “SOS சிறுவர் கிராமங்களினூடாக பெறுமதி வாய்ந்த பணி முன்னெடுக்கப்படுவதுடன், இலங்கையில் ஒவ்வொரு சிறுவருக்கும் தமது முழு ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய நிலைக்கு உயர்வதற்கான பங்களிப்பு வழங்கப்படுகின்றது. இந்த இளம் வயதினரிடையே தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை வலிமைப்படுத்தும் வகையில் மேலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் செயலாற்றுவதைப் பற்றி நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.” என்றார்.
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை கருத்துத் தெரிவிக்கையில், “AkzoNobel மற்றும் அதன் ஊழியர்கள் கடந்த காலங்களில் பெறுமதி வாய்ந்த பயிற்சிகளை வழங்கி, வாழிடப் பகுதிகளை மேம்படுத்தியிருந்ததுடன், எமது சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் நினைவிருக்கும் பயிலல் அனுபவங்களை வழங்கியிருந்தனர். நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துவது மாத்திரமன்றி, வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் இளம் வயதினர்களின் வாழ்வாதாரத்தை மாற்றியமைப்பதில் பங்களிப்பு வழங்கும் எமது நோக்கத்தை பகிரும் நிறுவனமொன்றுடன் எமது பங்காண்மையைப் புதுப்பிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.