புகைப்பிடிப்பதால் ஏற்படுகின்ற உண்மையான விளைவுகளை சரியாக விளங்கிக் கொள்வோம்

Share with your friend

ஜேர்மனிய இசையமைப்பாளரும், நாடக இயக்குனரும் மற்றும் நடத்துனருமான ரிச்சேர்ட் வாக்னர் அவர்கள் நவீன காலத்து இசை நாடகம் (ஓபேரா) மற்றும் இசை அரங்கத்திற்கு புதிய வடிவம் கொடுத்து, மேம்படுத்துவதில் மூலகர்த்தாவாகச் செயற்பட்டுள்ளார். இருப்பினும், வாக்னரைப் பொறுத்தவரையில் துரதிர்ஷ்டவசமாக அவரது உழைப்பின் பலன்களை ஹிட்லரும் அவருடைய நாசிப் படைகளுமே தமக்கு சாதமாக்கிக் கொண்டதுடன், நாசிப் படையின் பரப்புரைக்காக அவருடைய இசையைப் பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு வேண்டப்படாத ஒரு தரப்பினருடன் அவர் தொடர்புபடுத்தப்பட்டமையால், வாக்னரின் பாடல்கள் பல்வேறு வட்டாரங்களில் தவிர்க்கப்பட்டன.

தவறான தகவல்களால் நாம் வழிநடத்தப்படுவதை கணிசமான அளவில் குறைக்கச் செய்யும் அளவுக்கு தகவல் விபரங்கள் கைவிரல் நுனியில் நம்மத்தியில் நிறைந்துள்ள ஒரு யுகத்தில் இன்று நாம் வாழ்கின்றோம். புகைப்பிடிக்கும் பழக்கத்தை எடுத்து நோக்கும் போது, ‘புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது’ என்ற கூற்று தற்போது எங்கு பார்த்தாலும் ஒரு மருத்துவ அறிவுரையாக மாறியுள்ளது. எனினும் இவ்வாறு பொதுப்படக் கூறுவது சரியானதா என்பதை, ஒரு சிலர் மாத்திரமே நன்கு ஆராய்ந்து பகுத்தறியும் அளவுக்கு நிலைமை காணப்படுவது மறுக்க முடியாத ஒரு உண்மையாகும். புகைப்பிடித்தல் என்றால் உண்மையில் என்ன என்பது குறித்த ஆழமான ஆய்வு மூலமான பகுத்தறிவானது மேற்குறிப்பிட்டவாறு புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது என்ற பொதுவான அபிப்பிராயத்திலும் தவறுகள் உள்ளதை எமக்கு வெளிப்படுத்தக்கூடும். நிக்கொட்டின் குறித்து நம்மத்தியில் நிலவுகின்ற ஒட்டுமொத்த அவதூறானது, இதன் மூலமாக தீங்குகளைக் குறைக்கவல்ல உத்திகள் குறித்த சாத்தியங்களின் உண்மைகளை மறைக்கக்கூடும்.            

புகைப்பிடித்தலால் ஏற்படுகின்ற ஆபத்தான விளைவுகள் குறித்து அர்த்தமுள்ள வழியில் உரையாடுவதற்கு, புகையிலை மற்றும் நிக்கொட்டின் ஆகிய இரண்டுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். புகைப்பிடித்தலுக்கும், அதனுடன் தொடர்புபட்ட சுகாதாரரீதியான விளைவுகளுக்கும் இடையில் அவை இரண்டும் கொண்டுள்ள தனித்துவமான வகிபாகங்களை நாம் சரியாக தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். சிகரெட் புகைப்பிடித்தல் காரணமாகவே நிக்கொட்டின் உள்ளெடுக்கப்படுவதாக பல தசாப்தங்களாக நுகர்வோர் கருதி வருகின்றனர். இதனாலேயே புகைப்பிடித்தல் காரணமாக ஏற்படும் விளைவுகளையும், நிக்கொட்டினையையும் ஒன்றுடனொன்று இணைத்துப் பார்ப்பது பல விஞ்ஞானரீதியான ஆய்வுகளிலும், மக்கள் மனங்களிலும் இன்றும் நிலவி வருகின்றது. புகையிலை என்பது நிகோடியானா (Nicotiana) என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். பல நூற்றாண்டுகளாக இது செய்கை பண்ணப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருவதுடன், புகைப்பிடிப்பதற்கும், வாயில் போட்டு மெல்லுவதற்கும் பிரதானமாக உபயோகிக்கப்படுகின்றது. மறுபுறத்தில், நிக்கொட்டின் என்பது புகையிலை தாவரங்களில் இயற்கையாகவே உயர் அளவுகளில் காணப்படுகின்ற ஒரு பதார்த்தமாக இருந்த போதிலும் தனியே புகையிலை தாவரங்களில் மாத்திரம் காணப்படும் ஒரு பதார்த்தம் கிடையாது. உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும்  கத்தரிக்காய் போன்ற ஏனைய இயற்கை மூலங்களிலும் குறைந்த அளவுகளில் நிக்கொட்டின் காணப்படுகின்றது. வாக்னரின் பாடல்கள் புறக்கணிக்கப்பட்ட மனப்பான்மையுடன் ஒப்பிடுகையில், அது இந்த விடயத்திலும் பொருந்த வேண்டும். சுவாச வியாதிகள் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் நமது குடும்பங்கள் தமது அன்றாட சமையலில் கத்தரிக்காய் கறியைத் தவிர்ப்பது என்பது ஒரு அபத்தமான கருத்து. தவறான கண்ணோட்டம் எவ்வாறு மக்களின் பார்வையில் தவறாக வழிநடத்துகின்றன என்பதை இது பிரதிபலிக்கின்றது.                

நிக்கொட்டின் என்பது புகையிலையில் ஒரு பிரதானமான போதைக் கூறாகக் காணப்படுகின்ற போதிலும், புகைப்பிடித்தல் தொடர்புபட்ட ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு அதன் மேல் குற்றம் சுமத்த முடியாது.
சிகரெட் எரிக்க படும் போதே உண்மையான ஆபத்து ஏற்படுகின்றது. இவ்வாறு எரிக்கும் போது புகையிலை பல்லாயிரக்கணக்கான இரசாயன பதார்த்தங்களாக பிளவுபடுகின்றது. இவற்றில் பல இவ்வாறு எரிக்கப்படாத புகையிலையில் காணப்படுவது கிடையாது. தார், கார்பன் மோனாக்சைடு மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப்பொருட்கள் உள்ளிட்ட நச்சுப்பொருட்கள் எரிக்கப்படாத புகையிலையில் கிடையாது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) வெளியிட்டுள்ள ‘Vaping myths and facts’ (புகையிலை ஆவி நுகர்வு குறித்த கட்டுக்கதைகளும், உண்மைகளும்) என்பதில் “நிக்கொட்டின் என்பது போதை தருகின்ற ஒரு பதார்த்தமாக இருந்தாலும், ஒப்பீட்டளவில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றுநோய், நுரையீரல் வியாதி, இருதய வியாதி அல்லது பக்கவாதம் போன்றவற்றை நிக்கொட்டின் தான் தோற்றுவிக்கின்றது என்று கூறுவதை விடவும், புகைப்பிடிக்கும் போது புகையிலை புகைகொண்டுள்ள ஏனைய பல நச்சு இரசாயன பதார்த்தங்களே அத்தகைய வியாதிகளுக்கு காரணம் என இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே மக்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு நீண்ட காலமாக மருந்துகளில் நிக்கொட்டின் பாதுகாப்பான வழியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.               

நிக்கொட்டின் என்பதை விடவும், சிகரெட் எரிக்கும் போது உற்பத்தியாகின்ற 150 நச்சுப் பதார்த்தங்களே வியாதிகளுக்கும், மரணத்திற்கும் காரணமாக உள்ளன. நாளடைவில் ஏற்படும் நுரையீரல் வியாதி (chronic obstructive pulmonary disease -COPD), இருதய வியாதி, பக்கவாதம், மற்றும் புற்றுநோய் (குறிப்பாக நுரையீரல் புற்றுநோய்) போன்ற புகைப்பிடித்தலுடன் தொடர்புபட்ட பெரும்பாலான வியாதிகளுக்கு அவையே காரணம். நிக்கொட்டினில் ஆபத்து இல்லாமல் இல்லை என்றாலும், முக்கிய அவயங்களுக்கு அதனால் நேரடியான பாதிப்பு கிடையாது என்பதை விடவும், அந்த போதைக்கு அடிமையாவதே பிரதான அக்கறையாக காணப்படுகின்றது. புற்றுநோயை உண்டாக்கும் என்ற பிரிவின் கீழ் நிக்கொட்டினை உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) உள்ளடக்கவில்லை என்பதுடன், ஏனைய பல நாடுகளின் சுகாதார அதிகார சபைகளும் நிக்கொட்டின் என்பது போதை தரும் ஒன்றே எனவும், நேரடியாக புற்றுநோயை தோற்றுவிப்பதற்கான காரணி அல்ல எனவும் ஏற்றுக்கொண்டுள்ளன. (The Omni™)

சிகரெட்டுக்களுக்குப் பதிலாக ஈ-சிகரெட்டுக்களை முற்றாக பயன்படுத்துவது பல்வகைப்பட்ட நச்சுப் பதார்த்தங்கள் மற்றும் புற்றுநோய் காரணிகள் தொடர்பான ஆபத்தைக் குறைப்பதாக The National Academies of Science, Engineering, and Medicine – NASEM முடிவுக்கு வந்துள்ளது. இத்தகைய முடிவுகளுக்கு மத்தியிலும், புகைப்பிடித்தலை விடவும், ஈ-சிகரெட்டுக்களைப் புகைப்பது ஆபத்தைக் குறைக்கின்றது என அமெரிக்க மக்களில் 11.4% பேர் மாத்திரமே கருதுகின்றனர். விஞ்ஞானரீதியான சான்று மற்றும் மக்களின் கண்ணோட்டம் ஆகியவற்றிற்கிடையில் இடைவெளி உள்ளதை இது காண்பிக்கின்றது.     

புகைப்பிடித்தல் ஆபத்தானது என்பதை மறுக்க முடியாது என்றாலும், நிக்கொட்டினைப் பொறுத்தவரையில், புகைப்பிடித்தலால் ஏற்படும் ஆபத்தானது, புகையிலையிலிருந்து வேறாக்கப்பட்டு நுகரப்படும் போது ஏற்படும் ஆபத்திற்கு ஒத்தது கிடையாது. எரித்து நுகர்கின்ற சிகரெட்டுக்களிலிருந்து தூர விலக விரும்புகின்றவர்களுக்கு மிகவும் நிலையான மாற்றுவழியை இது வழங்கக்கூடும்.

நிக்கொட்டின் மற்றும் புகையிலை ஆகியவற்றுக்கு இடையிலான தனித்துவமான வேறுபாட்டை தெளிவாக இனங்காண்பதால், ஒட்டுமொத்தமாக அவதூறை ஏற்படுத்துவதை விடுத்து, ஆபத்தைக் குறைத்துக் கொள்வது தொடர்பான உரையாடல்களை அறிவுபூர்வமாக நம்மால் முன்னெடுக்க முடியும். மோசமான சேர்க்கையை மாத்திரம் காரணம்காட்டி வாக்னரின் பாடல்கள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டிருக்கக்கூடாதோ, புகைப்பிடித்தலுடன் கொண்டுள்ள வரலாற்றுரீதியான இணைப்பு காரணமாக நிக்கொட்டினையும் கண்மூடித்தனமாக இழிவுபடுத்தக்கூடாது. ஆகவே புகைப்பிடித்தல் எவ்வாறு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றது என்பது குறித்த கேள்விக்கு விடை காண முயலுவோம், அல்லது குறைந்தபட்சம் அது குறித்த உரையாடல்களையாவது ஆரம்பிப்போம்.      


Share with your friend