தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL, 2021 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வரிக்கு பிந்திய இலாபத்தில் 49.2 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. இந்தப் பெறுமதி ரூ. 3.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தினுள் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் விரயத்தை குறைத்து, கழிவுகளை பணமாக மாற்றிய நடவடிக்கைகளுடன், செயற்பாட்டு செலவுகளை நிர்வகித்திருந்ததனூடாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சேமிப்புகளை பதிவு செய்ய முடிந்திருந்தது.
![](https://eyeviewsl.com/wp-content/uploads/2021/11/IMAGE-1024x284.jpg)
SLT குழுமத்தின் 2021 மூன்றாம் காலாண்டுக்கான வருமானம் 15.6 சதவீதத்தால் அதிகரித்து, ரூ. 26.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. குழுமத்தின் EBITDA (Earnings Before Interest, Tax, Depreciation and Amortisation) பெறுமதி ரூ. 10.8 பில்லியனாக பதிவாகியிருந்தது. அது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் 2020 மூன்றாம் காலாண்டில் 37.1 சதவீதமாக தென்பட்ட EBITDA வரம்பு(EBITDA Margin) இவ்வருட மூன்றாம் காலாண்டில் 40.4 சதவீதமாக பதிவாகியிருந்தது.
2020 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2021 இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வருமானம் 14 சதவீதத்தால் அதிகரித்து ரூ. 76.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய சந்தைப்படுத்தல் உத்தியின் காரணமாக இந்த சாதனை சாத்தியமானது. வீடுகள் மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கான அதிகரித்த ஃபைபர் இணைப்புகள் , PEO TV மற்றும் மொபைல் சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு போன்றவற்றின் பங்களிப்புடன், வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 9.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது 36.1 அதிகரிப்பாகும்.
2021 இன் முதல் 9 மாத காலப்பகுதியில், குழுமத்தின் மூலதன செலவீனம் ரூ. 18.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேசிய ஃபைபர் மயமாக்கல் திட்டத்தின் கீழ், துரிதப்படுத்தப்பட்ட ஃபைபர் விரிவாக்கம் ஊடாகவும், புதிய LTE base stations மற்றும் tower களில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தமை போன்றவற்றினூடாகவும் இலங்கையில் தரமான டிஜிட்டல் இணைப்புத்திறனை மேம்படுத்தும் குழுமத்தின் அர்ப்பணிப்பு முன்னேற்றத்தை பதிவு செய்திருந்தது. மேலும், புதிய 5G தொழில்நுட்பத்தினூடாக, இலங்கையர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவம் வழங்கப்படும். கடலுக்கடியிலான கேபிள் வலையமைப்பு மற்றும் உள்ளக போக்குவரத்து வலையமைப்பு போன்றவற்றில் குழுமத்தின் முதலீடுகள் உறுதியாக அமைந்திருப்பதுடன், தரத்தை மேம்படுத்தி, சேவை மட்டங்களை உயர்ந்த நிலையில் பேணுவதற்கு பங்களிப்பு வழங்குகின்றன.
முதல் 9 மாத காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கான SLT குழுமத்தின் பங்களிப்பு மொத்தமாக ரூ. 15.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் நேரடி, மறைமுக வரிகள் மற்றும் கட்டணங்கள் மற்றும் பங்கிலாபங்களும் அடங்கியிருந்தன.
SLT குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “ ‘SLT-MOBITEL’ ஆனது தொலைபேசியில் இருந்து தொழில்நுட்பத்திற்கு மாற்றத்தின் உச்சத்தில் உள்ளது. அது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் ஆதரவுடன் இலங்கையை டிஜிட்டல் தளத்திற்கு நகர்த்துகிறது. சேவை மற்றும் தொழில்நுட்பத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மொபிடெல் தலைமையகத்தின் நிர்மாணப் பணிகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2022 இல் கட்டிடம் நிறைவடைந்ததும், வெலிக்கடையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்ப பூங்காவில் எங்களின் அனைத்து மொபைல் சேவைகளும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரப்படும். புதிய தலைமையகத்தில் ஆராய்ச்சி மற்றும் அதிநவீன கண்டுபிடிப்புகளுக்காக ஒரு முழு தளத்தையும் அர்ப்பணிக்கிறோம். டிஜிட்டல் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு எமது ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படுவதுடன், தேசத்துக்கும் மக்களுக்காகவும் சேவைகளை வழங்குகின்றோம்.” என்றார்.
SLT குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “தடுப்பூசி ஏற்றப்பட்ட பணியாளர்களுடன் நாடு தொடர்ந்தும் வினைத்திறன் வாய்ந்த வகையில் இயங்கும் நிலையில், அரசாங்கம், மக்கள் மற்றும் நிறுவனங்களை டிஜிட்டல் முறையில் இணைக்கும் பணிகளை SLT குழுமம் வலிமைப்படுத்திய வண்ணமுள்ளது. குழுமத்தின் ஒவ்வொரு அங்கத்தவராலும் வெளிப்படுத்தப்பட்டிருந்த அர்ப்பணிப்பினூடாக மற்றும் சவால்கள் மிகுந்த ஒரு கால பகுதியில் நாங்கள் செய்த பணிகள் காரணமாக, சிறந்த நிதிப் பெறுபேறுகள எய்தக்கூடியதாக இருந்தது. இலங்கையர்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை தொடர்ந்து பேணி, அவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி, அவர்களின் விருப்பத்துக்குரிய தொலைத் தொடர்பாடல் தீர்வுகள் வழங்குநராக திகழ்வோம்.” என்றார்.
குழுமத்தின் தாய் நிறுவனமான ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி (SLT), முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டின் முதல் 9 மாத காலப்பகுதியில் வரிக்கு பிந்திய இலாபமாக 45.4 சதவீத அதிகரிப்பை அடைந்து ரூ. 5.1 பில்லியனை பதிவு செய்திருந்தது. வருமானம் 17.3 சதவீத அதிகரிப்பை பதிவு செய்து, ரூ. 44.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. புரோட்பான்ட் வருமானம், PEOTV வருமானம் மற்றும் வீட்டுப் பாவனைக்கான தொலைபேசி வருமானங்களில் அதிகரிப்பை நிறுவனம் பதிவு செய்திருந்தது.
SLT பிரதம நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “ஃபைபர் விரிவாக்க நிகழ்ச்சித் திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக SLT-MOBITEL இனால் முன்னெடுக்கப்படும் திட்டங்களினூடாக, மிகச்சிறந்த பெறுபேறுகள் பதிவாகின்றன. மேலும் 4G வலையமைப்பின் வளர்ச்சியும் காணப்படுகின்றன. தொற்றுப் பரவலுடனான சூழ்நிலையிலும், துரித விரிவாக்க பணிகளில் எமது ஊழியர்கள் தம்மை ஈடுபடுத்தியதுடன், எந்தவொரு ஊழியருக்கும் வருமானம் அல்லது அனுகூலங்கள் இழப்பு ஏற்படாத வகையில் நிறுவன்ம் அவர்களை ஆதரித்தது . தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில், இலங்கையர்கள் அனைவரையும் டிஜிட்டல் இணைப்புத்திறனுடனான எதிர்காலத்துக்கு கொண்டு செல்வதை நாம் நோக்காகக் கொண்டுள்ளோம். ஒன்றிணைக்கப்பட்ட வர்த்தக நாமத்தின் அனுகூலங்களை எமது பங்காளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.” என்றார்.
தொற்றுப் பரவல் காரணமாக பாதிப்புக்குள்ளானவர்களை இலக்காகக் கொண்டு SLT-MOBITEL இனால் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. முன்கள சுகாதார பராமரிப்பு பணியாளர்களுக்காக ‘Suwaviru Upahara’குரல் மற்றும் டேட்டா சலுகைகள் கோவிட் நோயைத் தடுக்க இரவும் பகலும் உழைக்கும் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மன அமைதியை உறுதி செய்தது; வகுப்பறையில் நேரடியாக அமர்ந்து கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்காக தரமான கற்றல் வாய்ப்புகள் பெற்றுக்கொடுத்த ‘Call Tutor’ மற்றும் ‘A/L Kuppiya’ போன்றன அதிகளவு வரவேற்பைப் பெற்றிருந்தன. கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்காக, CISCO உடன் கைகோர்த்து ஆன்லைன் சேவைகளை தடையின்றி மேற்கொள்ள உதவும் புதிய நிர்வகிக்கப்பட்ட SD-WAN சேவைகளை வழங்கவும் முன்வந்திருந்தது. மேலும் ஆன்லைன் வியாபர கட்டமைப்புகளை நோக்கி மென்மேலும் நகரும் சிறிய நடுத்தரளவு வாடிக்கையாளர்களுக்காக ‘SLT-MOBITEL BizChat FB Chatbot’ சேவை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த 2021 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில், நிறுவனத்தின் மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல் பிரைவட் லிமிடெட்டின் வருமானம் ரூ. 3 பில்லியனை விட அதிகரித்திருந்தது. இது, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீத அதிகரிப்பாகும். பொருளாதாரம் மந்தமடைதல் மற்றும் இதர சவால்களுக்கு மத்தியிலும், மொபிடெல் வருமான அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஒன்பது மாத காலப்பகுதியில், வரலாற்றில் மொபிடெல் பதிவு செய்திருந்த அதியுயர் இலாபத்தை கடந்து, ரூ. 5.7 பில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 45.9 சதவீத அதிகரிப்பாகும். நிலவும் சூழலில் வாடிக்கையாளர்கள் சிறந்த டிஜிட்டல் தொடர்பாடல் தெரிவுகளுக்கு மாறியிருந்தமை காரணமாகவும், நிறுவனத்தின் புரோட்பான்ட் பிரிவில் வருமான அதிகரிப்பு காரணமாகவும் இந்த உயர்வு பதிவாகியிருந்தது. வினைத்திறன் வாய்ந்த OPEX மற்றும் CAPEX நிர்வாகத்தினூடாக உறுதியான இலாபகரத்தன்மையை எய்த முடிந்ததுடன், பணப்பாய்ச்சல் வளர்ச்சியையும் எய்த முடிந்தது. 2021 மூன்றாம் காலண்டில் மொபிடெல் உறுதியான நிலையில் காணப்பட்டது.
மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரன கருத்துத் தெரிவிக்கையில், “தேசிய மொபைல் சேவை வழங்குநர் எனும் வகையில், இலங்கையில் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதில் மொபிடெல் தன்னை அர்ப்பணித்துள்ளது. இலங்கையில் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் மொபிடெலைச் சேர்ந்த நாம் கவனம் செலுத்துகிறோம். பணத்தை பயன்படுத்துவதுடன் தொடர்புடைய பிரச்சனைகள் தொடர்பில் வழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்ற நாம், வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் சௌகரியத்தையும் ஊக்குவிக்கின்றோம். மேலும், வீட்டிலிருந்து பணியாற்றும் செயற்பாடுகளையும் புதிய வழமையின் கீழ் நாம் ஊக்குவித்து வசதியளிக்கின்றோம். இதற்கமைய, கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகள் போன்றன கடதாசி பாவனையற்ற செயற்பாடுகளுக்கு மாற்றமடைந்து, டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட வண்ணமுள்ளன. மேலும் தொலைதூர கல்வி பயிலல் செயற்திட்டங்களை நிறுவனம் ஊக்குவிப்பதுடன், எங்கிருந்தும் எவ்வேளையிலும் தமக்குரிய கற்றல் வளங்களை தமது விரல்நுனிகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
முன்னுதாரணமாக செயலாற்றியிருந்த மொபிடெல், தனது மொத்த ஊழியர்களில் 50 சதவீதமானவர்களை வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு பணித்திருந்ததுடன், அதனூடாக பெருமளவு எரிபொருள் சேமிப்பையும் மேற்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 80 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றது. அதனூடாக அதிகளவு எரிபொருள் சேமிப்பை மேற்கொள்ள முடியும் என்பதுடன், உற்பத்தித் திறனை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். தொலைதூர பயிலலை ஊக்குவிக்கும் வகையில், மொபிடெலினால் கவர்ச்சிகரமான வீட்டிலிருந்து பணியாற்றும் டேட்டா திட்டங்கள் மற்றும் வீட்டிலிருந்து பயிலும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.