இலங்கையின் கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி நிர்வாகக் பிரிவுக்கான பயிற்சித் திட்டத்தை தொடங்க Facebook இலங்கை கணனிச் சங்கத்துடன் (CSSL) கூட்டிணைந்துள்ளது. இது இலங்கையில் Facebook இனால் கொண்டு நடாத்தப்படும் We Think Digital எனும் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.
கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான சிரேஷ்ட ஆணையாளர் திரு. இ.எம்.எஸ். ஏகநாயக இந்த ஒன்லைன் நிகழ்வில் கலந்துகொண்டார். அவர் மேலும், பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சியளிக்கும் இத்திட்டத்தை முன்னெடுத்தமைக்காகவும் அதற்கான சாத்தியங்களை ஆராய்ந்திட CSSL இனை அணுகியமைக்காகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ஆர்.எம்.எம். ரத்நாயக அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், டிஜிட்டல் புலத்தில் நடமாடுவதற்கு மாணவர்களுக்கு உதவிடும் ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வலய பணிப்பாளர்கள் ஆகியோரின் திறன்களை வளர்க்கும் இக்கூட்டாண்மைக்காக facebook மற்றும் CSSL இனருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தார்.
மேலும் டிஜிட்டல் குடியுரிமை மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு பற்றி விவாதிக்க கலந்துரையாடல் நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அக்குழு உறுப்பினர்களுள், டிஜிட்டல் ஊடக ஆர்வலரான திரு. நாலக் குனவர்தன உள்ளடங்கலாக Facebook, CSSL, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவகம் (ICTA) மற்றும் சர்வோதய ஃபியூஷன் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் காணப்பட்டனர். இதில் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் மற்றும் கல்வி அமைச்சின் ஆசிரியர் மையங்களின் விரிவுரையாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு வளர்ச்சியில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள், வல்லுனர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் பிரதான உரையை LIRNEasia வின் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ நிகழ்த்தினார்.
Facebook இன் APAC இல் கொள்கைத் திட்டங்களின் முகாமையாளராக விளங்கும் ஜெரால்டின் லிம் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையில், “உலகம் பெருமளவில் டிஜிட்டல்மயமாகி வருகிறது. மேலும் தங்களை ஒன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்க கிடைக்கும் ஆதாரங்களைப்பற்றி மக்களுக்கு தகவல் மற்றும் வழிப்புணர்வை வழங்குவது மிகவும் முக்கியமானது ஆகும். தகவல் மற்றும் டிஜிட்டல் திறன்களுடன் இலங்கையின் இளைஞர்களை மேம்படுத்துவதற்கு CSSL உடன் கூட்டிணைவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். அத்துடன் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் குறிப்பாக இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஒன்லைனில் மகிழ்ச்சிகரமான அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள உதவிட முடியும்.” எனத் தெரிவித்தார்.
Ipsos Public Affairs உடன் கூட்டிணைந்து Facebook அண்மையில் மேற்கொண்ட உலகளாவிய நுகர்வோர் கணக்கெடுப்பின் போது Facebook apps பாவித்திடும் 83% மானோர் இந்த கொவிட் 19 பெருந்தொற்றுக் காலம் தொடங்கியது முதல் தங்கள் குடும்பத்தினருடன் மற்றும் நண்பரகளுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தியுள்ளனர். அதிகமான மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் பொழுதுபோக்குக்காக ஒன்லைன் தளங்களை பயன்படுத்துகின்றனர். ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் இந்த பயிற்சித் திட்டத்துக்கான பாடத்திட்டம் CSSL மற்றும் அதன் கூட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒன்லைன் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடியதுடன் விமர்சன ரீதியாக சிந்திக்கவும் ஒன்லைனில் அவதானத்துடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
CSSL இன் தலைவர் தமித் ஹெட்டிஹேவா கருத்து தெரிவிக்கையில், “பல மாணவர்கள் தங்கள் டிஜிட்டல் இடத்தை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. அதனால் அவர்கள் உண்மையான உலக பாதிப்புக்கு ஆளாகின்றனர். இளைஞர்கள் எமது நாட்டின் எதிர்காலம். அவர்கள் தொழில்நுட்பத்தையும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் வடிவமைப்பர். 2021 CSSL மூலோபாயத் திட்டத்தின் ‘பங்களிப்பு’ எனும் தூணின் கீழ் Facebook உடனான இந்த கூட்டிணைவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் CSSL இனரான நாம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவ்வாறானதொரு முன்முயற்சியை நிகழ்த்துவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறோம்.” எனத் தெரிவித்தார்.
இப்பயிற்சித்திட்டத்தின் மூலம் அமைச்சுப் பிரிவின் சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகள் மாணவர்களினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் ஒன்லைன் தளங்களை மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான வழியில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர்கள் அறிவார்கள். இத்திட்டத்தின் அடுத்த இரண்டு கட்ட பயிற்சிகளும் அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும்.