வட பிராந்தியத்தில் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை இனங்காண்பதற்காகவும், அப்பிராந்தியத்தில் அதிகரித்துச் செல்லும் நிலையான மற்றும் மொபைல் இணைப்புகளின் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தும் வகையில், தேசிய தொலைத்தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவானான SLT-MOBITEL இன் உயரதிகாரிகள் குழுவினர், யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் போது வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்தாரின் தேவைகள் தொடர்பில் இவர்கள் ஆராய்ந்திருந்தனர்.
சிரேஷ்ட அங்கத்தவர்கள் அடங்கலாக, நிறுவனத்தின் நாற்பது பேரைக் கொண்ட குழுவினர், பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தி இந்த விஜயத்தில் ஈடுபட்டனர். இதன் போது, நாடு பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், நிறுவனத்தின் கள விஜயங்களுக்கான செலவுகளை குறைக்கும் குறிக்கோளுடன் இந்த விஜயத்துக்காக பொதுப் போக்குவரத்து சேவை பயன்படுத்தப்பட்டிருந்தது.
பொது மக்கள், சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள், வர்த்தகங்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல தரப்பினருடனும் இந்த அணி தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஒவ்வொரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி கவனம் செலுத்தியிருந்தது.
இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்த SLT குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “நிறுவனத்தில் வட பிராந்தியம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. குறிப்பாக, நிறுவனத்தின் வளர்ச்சியில் இந்தப் பிராந்தியம் அதிகளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. தேசத்தின் தொலைத்தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முதுகெலும்பாக SLT-MOBITEL திகழ்கின்றது. நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது முதல், வட பிராந்தியத்தைச் சேர்ந்த பல பொறியியலாளர்கள் உறுதியான வலையமைப்பைக் கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்கியுள்ளனர். வட பிராந்தியத்தைச் சேர்ந்த எமது ஊழியர்கள் மற்றும் அலுவலகங்கள் 40 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்றன. நெருக்கடியான காலப்பகுதிகளிலும் உறுதியான மற்றும் தங்கியிருக்கக்கூடிய இணைப்புத்திறனை வழங்கியுள்ளது. நாட்டில் காணப்படும் இரண்டாவது மிகவும் உயரமான வலையமைப்பு கோபுரம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளது. நாடு முழுவதிலும் பல துறைகளுக்கு வலுவூட்டும் இந்த உட்கட்டமைப்பை நிர்மாணிப்பதில் வட பிராந்தியத்தைச் சேர்ந்த மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். தற்போது, இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில், பிராந்தியத்தைச் சேர்ந்த சமூகங்கள் மற்றும் வியாபாரங்களுக்கு SLT-MOBITEL இனால் எவ்வாறான பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள எதிர்பார்க்கின்றோம். இந்தப் பிராந்தியத்தில் நாம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பல விஜயங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. பிராந்தியத்தின் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவளிப்பதற்கு எம்மாலான சகல பங்களிப்பையும் நாம் வழங்குவோம்.” என்றார்.
வட பிராந்தியத்தின் பொருளாதார மீட்சியில் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொள்ளும் SLT-MOBITEL, நாட்டின் தொலைத்தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப பின்புலத்தை வலிமைப்படுத்தக்கூடிய வழிமுறைகளை இனங்காண்பதற்காக புகழ்பெற்ற நெடுந்தீவுக்கும் விஜயம் செய்திருந்தது. வட மாகாணத்தின் ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளின் பிரகாரம் இந்த விஜயம் அமைந்திருந்தது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீவை, இலங்கையின் சுற்றுலா மையமாக மாற்றக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதுடன், நெடுந்தீவை சுற்றுலா மையமாக மாற்றுவதனூடாக, இந்தத் தீவைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரம் மக்களுக்கு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கும்.
ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் சேவைகளை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது தொடர்பில் யாழ்ப்பாண அலுவலகத்தின் ஊழியர்கள் மற்றும் பிராந்திய அணிகளுடன் SLT-MOBITEL இன் சிரேஷ்ட நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தனர். வட பிராந்தியத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்காக விசேடமான கலோ கலோ பக்கேஜை அண்மையில் SLT-MOBITEL அறிமுகம் செய்திருந்தது. தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் வியாபாரங்களுக்கு இந்த நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் பல அனுகூலங்களை வழங்குவதாக இந்தப் பக்கேஜ் அமைந்துள்ளது. வட பிராந்தியத்துக்காக விசேடமாக அமைந்த பல தீர்வுகள் மற்றும் சேவைகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.