Ex-Pack நிறுவனம் ஆரம்ப பொது பங்கு வழங்கல் சலுகையை அறிவிக்கிறது

Share with your friend

இலங்கையில் பொதி செய்வதற்கான அட்டைப் பெட்டிகளின் உற்பத்தியில் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்ற Ex-Pack நிறுவனம் தற்போது புதிய அத்தியாயமொன்றில் கால் பதிக்கவுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் வகையில் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையை வெகுவிரைவில் அது மேற்கொள்ளவுள்ளது. Ex-Pack Corrugated Cartons Limited நிறுவனமானது முற்றுமுழுதாக Aberdeen Holdings நிறுவனத்தின் உரிமையாண்மையின் கீழானது. முன்னர் Expolanka Investments (Private) Limited என்ற பெயரில் அறியப்பட்ட Aberdeen Holdings நிறுவனம் மருந்து வகை, நுகர்வுப் பண்டங்கள், விமான சேவை, போக்குவரத்து, எரிசக்தி, விவசாயம், பொதியிடல் மற்றும் மீள்சுழற்சி, பொதிகளைக் கையாளும் ஏற்பாட்டியல் அடங்கலாக பெருவாரியான தொழிற்துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் மிகவும் நன்மதிப்பைச் சம்பாதித்துள்ள, பன்முகப்படுத்தப்பட்ட, குடும்ப கூட்டு வணிகங்களின் பெரு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது.  

வணிகம் மற்றும் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை தொடர்பில் இந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான சத்தார் காசிம் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “தொழிற்துறைகளுக்கு சேவைகளை வழங்கும் வணிகச் செயற்பாடுகளில் அசைக்கமுடியாத நன்மதிப்பினைக் கட்டியெழுப்பியுள்ள Ex-Pack நிறுவனம், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பொதி செய்யும் அட்டைப் பெட்டிகளைப் பொறுத்த வரையில் சந்தையில் நன்கு அறியப்படும் பெயராகவும், அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள ஒரு நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்றது. தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான எங்கள் நற்பெயர் தொழில்துறையில் ஈடு இணையற்றது என்பதுடன், உற்பத்தியில் மட்டுமல்லாமல் ஏற்றுமதியிலும் இலங்கையில் சந்தை முன்னோடியாக நாங்கள் வளர்ச்சி கண்டுள்ளோம். Ex-Pack நிறுவனமானது விரைவாக விற்றுத் தீருகின்ற நுகர்வோர் உற்பத்திகள், நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்கள், ஆடையணி, தேயிலை மற்றும் மீன்பிடி அடங்கலாக பல்வேறுபட்ட தொழிற்துறைகள் மத்தியில் உலகளாவில் மிகவும் பிரபலமான வர்த்தக வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகநாமங்களுக்கு தனது சேவைகளை வழங்கி வருகின்றது. 295 ஊழியர்களைக் கொண்ட எங்கள் அணி மாதந்தோறும் 203,000 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட உற்பத்தி தொழிற்சாலையில் 2,650 மெட்ரிக் தொன் பொதி செய்யும் அட்டைப்பெட்டிகளை உற்பத்தி செய்து வரும் அதே நேரத்தில், எங்கள் குழும வருவாயில் 52% ஏற்றுமதி சந்தைகளில் அமெரிக்க டொலர் வருவாயிலிருந்து கிடைக்கப் பெறுகிறது. எங்கள் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை மூலமாக திரட்டப்படும் மூலதனத்தில் ஒரு பகுதியை, 2025 ஆம் ஆண்டளவில் எமது மாதாந்த உற்பத்தி ஆற்றலை 4,000 மெட்ரிக் தொன்னாக அதிகரிக்கச் செய்வதற்கு புதிய ஆலையொன்றை அமைத்து, எமது உற்பத்திக் கொள்ளளவை விஸ்தரிப்பதற்கு பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

Ex-Pack Corrugated Cartons Limited நிறுவனம் இந்த ஆரம்ப பொது பங்கு வழங்கல் நடவடிக்கை மூலமாக நிறுவனத்தின் 25% பங்குகளை வழங்கி அல்லது 83,333,333 சாதாரண வாக்குரிமைப் பங்குகளை பங்கொன்று ரூபா 8.40 என்ற விலையில் வழங்குவதன் மூலம் பொதுமக்களிடமிருந்து ரூபா 700 மில்லியன் வரையான மூலதனத்தைத் திரட்ட எதிர்பார்த்துள்ளது. இது ரூபா 2.8 பில்லியன் சந்தை மூலதன மதிப்பைப் கொண்டிருக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை மூலம் திரட்டப்படுகின்ற நிதி ரூபா 2.98 பில்லியன் செலவில் புதிய அதிநவீன உற்பத்தி ஆலையை தொடங்குவதற்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்வாரியாக பெறப்பட்ட நிதி மற்றும் கடன் நிதியின் மூலம் இதற்கு பெருமளவில் நிதியளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஸ{ல்ஃபிகர் கௌஸ் அவர்கள் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிடுகையில், “தனது வலுவான, பன்முகப்பட்ட தலைமைத்துவ அணி மற்றும் தாய் நிறுவனத்தின் பக்கபலம் ஆகியவற்றின் மூலம், இலங்கையில் பொதிசெய்யும் அட்டைகள் தொழிற்துறையில் ஏனைய நிறுவனங்களிலிருந்து Ex-Pack தனித்துவத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. ஒரு பாரம்பரிய உற்பத்தியாளர் என்ற அந்தஸ்திலிருந்து, முழுமையான சேவைகளையும் வழங்கும் பொதி செய்யும் அட்டைப் பெட்டிகளின் வழங்குனராக வளர்ச்சி மாற்றம் கண்டுள்ள Ex-Pack நிறுவனம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற அட்டைப் பெட்டிகளில் 5 க்கு 1 என்ற அடிப்படையில் தனது உற்பத்தி ஆற்றலைக் கொண்டுள்ளதுடன்,  மற்றும் வலுவான சர்வதேச தொழிற்பாடுகளைக் கொண்டுள்ள ஒரே இலங்கை உற்பத்தி நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்றது. Ex-Pack நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த காரணிகள் அதன் மீது ஒரு கட்டாய ஈர்ப்பினை ஏற்படுத்தும்,” என்று குறிப்பிட்டார்.

நிலைபேண்தகமை மற்றும் பொறுப்புணர்வு மிக்க வணிகம் ஆகியவை Ex-Pack நிறுவனத்தின் மரபினுள் இயல்பாக உட்பொதிந்துள்ளன. இது அதன் விசேட மற்றும் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனமான Neptune Papers நிறுவனத்தின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மீள்சுழற்சி மற்றும் காகித சேவைகளில் ஒரு முன்னோடி நிறுவனமாக இது திகழ்வதுடன், Ex-Pack இன் குழும வருமான மட்டத்தில் ஏறத்தாழ 30% இனை பொறுப்புணர்வுடன் பங்களிப்பு செய்து வருகின்றது. நிறுவனம் ஒரு பொறுப்புணர்வுமிக்க வர்த்தக நிறுவனம் மற்றும் தனது சமூகங்களை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் ஒரு தொழில்தருநர் எனவும் நன்மதிப்பினை சம்பாதித்துள்ளது.Ex-Pack நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் வழக்கமான துளையிடப்பட்ட அட்டைப்பெட்டிகள் (Regular slotted cartons), டை-கட் அட்டைப்பெட்டிகள் (die-cut cartons), லெமினேட் செய்யப்பட்ட அட்டைப்பெட்டிகள் (laminated cartons) மற்றும் மீள்சுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விசேடமாக வடிவமைக்கப்பட்ட விசேட தயாரிப்புக்கள் அடங்கியுள்ளன. இந்த விசேட தயாரிப்புகளில் ஆடையணிகள் மற்றும் இலகுரக மீன் கொள்கலன்களின் சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்காக தயாரிக்கப்படும் அலுமாரி வடிவ அட்டைப்பெட்டிகள் (ஆடை தொங்கிகளுடன்) போன்ற தனித்துவமான மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் அடங்கியுள்ளன. 2020 பொதுத் தேர்தலுக்காக இலங்கையின் தேர்தல் ஆணையத்திற்கு 12,350 தொழில்நுட்ப அம்சம் நிரம்பிய வாக்குப்பெட்டிகளை Ex-Pack பெருமையுடன் வடிவமைத்து, தயாரித்து வழங்கியிருந்தது. நிறுவனத்தின் சர்வதேச பிரசன்னம் மாலைதீவு, கட்டார், இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மடகாஸ்கர், சீஷெல்ஸ் மற்றும் ரியூனியன் தீவு உட்பட 8 முக்கிய சந்தைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply