INSEE Cement உலக சுற்றுச்சூழல் தினத்தில் தேசத்தை மறுசீரமைப்பதற்கான அர்ப்பணிப்பினை வலுப்படுத்துகிறது

Share with your friend

இலங்கையின் ஒரேயொரு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளரான INSEE Cement, உலக சுற்றுச்சூழல் தினம் 2021 அன்று பாதிப்படைந்துள்ள சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை மறுசீரமைக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உலகளாவிய அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் ‘மறுசீரமைக்கப்பட்ட தேசம்’ மீதான தனது அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையின் கட்டுமானத் துறையை பற்றுறுதியுடன், உலகளவில் நிர்ணயிக்கப்பட்ட காலநிலை இலக்குகளை நோக்கி நகர்த்துவதற்கான அதன் ஆணையை முன்னெடுத்துச் செல்கின்ற INSEE Cement, நாடு முழுவதும் பரந்துள்ள இலங்கையின் பல்வேறு சுற்றுச்சூழல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கான அதன் அர்ப்பணிப்பினை இரட்டிப்பாக்குவதன் மூலம் ‘சுற்றுச்சூழலை மறுசீரமைப்பதற்கான ஐக்கிய நாடுகள் தசாப்தத்தை’ ஆரம்பித்துள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினம் தொடர்பில் INSEE Cement – Sri Lanka நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் மனிதவளத்துறைப் பணிப்பாளரான சந்தன விஜயநாம அவர்கள், “சுற்றுச்சூழல் கட்டமைப்புகளின் சீரழிவைத் தடுக்கவும், நிறுத்தவும், அதனை மறுசீரமைக்கவும் அவசரமாக செயல்பட வேண்டியதற்கான தேவையைப் புரிந்துகொண்டதிலிருந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டியமை தொடர்பான எங்கள் முயற்சிகள் தோன்றியுள்ளன. இயற்கை வளங்களுடன் உள்ளார்ந்த மற்றும் மாற்றமுடியாத வகையில் இணைக்கப்பட்ட ஒரு வணிகமாக, INSEE Cement ஆரம்பத்திலிருந்தே நிலைபேறு கொண்ட உற்பத்தி மற்றும் பொறுப்புணர்வுமிக்க வணிக நடைமுறைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பைத் தணிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்துள்ளது. நமது சுற்றுச்சூழல் அமைப்புகளை பேணிப் பாதுகாப்பதில், இயற்கை வாழ்விடங்களை மேம்படுத்துவதில், நமது மண்ணையும் நீர்வளத்தையும் பாதுகாப்பதில், காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எங்கள் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதில் எங்களது பங்கினை ஆற்றுவோம் என்ற அர்ப்பணிப்புடனான உறுதிப்பாட்டை இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாங்கள் மேலும் வலுப்படுத்துகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

INSEE Cement பல ஆண்டுகளாக இலங்கையில் மறுசீரமைப்பு, பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு சார்ந்த செயற்திட்டங்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளதுடன், சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் ஸ்தாபனங்களுடன் ஒத்துழைத்து, சுரங்க நிலம், சதுப்புநில வாழ்விடங்கள், மழைக்காடுகள் மற்றும் பவளப்பாறைகள் ஆகிய நான்கு முக்கிய உள்ளூர் சுற்றுச்சூழல் கட்டமைப்புகளில் பாரியளவில் நற்பயனை விளைவித்துள்ளது. இலங்கையின் மிகப் பெரிய சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் ஒன்றான அறுவாக்காட்டில் மீளுற்பத்தி செயற்திட்டத்திற்கு ஆதரவளித்து, சுரங்க செயற்பாடுகளின் நீண்டகால சுற்றுச்சூழல் தாக்கத்தை INSEE தொடர்ந்தும் குறைத்து வருகிறது. காடு வளர்ப்பு செயற்திட்டமாக 1999 இல் தொடங்கப்பட்ட வகையில், INSEE Cement, 2007 ஆம் ஆண்டில் சுரங்கத்தின் மேம்பட்ட பல்லுயிர் பாதுகாப்புக்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்துடன் (ICUN) கைகோர்த்தது. 2008 ஆம் ஆண்டில் ஒரு விலங்கு மீட்பு மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சித்திட்டம் தொடங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ICUN உடன் இணைந்து 2009 இல் மறுசீரமைப்பு கண்காணிப்பு நெறிமுறை உருவாக்கப்பட்டது. இன்று, 20,493 க்கும் மேற்பட்ட விலங்குகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 126,000 க்கும் மேற்பட்ட மரங்கள் நாட்டப்பட்டு, 311.64 ஏக்கர் காடுகள் மீளவும் வளர்க்கப்பட்டுள்ளன.  

2019 ஆம் ஆண்டில், வனவிலங்கு மற்றும் சமுத்திர வள பாதுகாப்பு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையுடன் இணைந்து, INSEE இன் காலி மற்றும் றுகுணு சீமெந்து ஆலைகளுக்கு அருகில் அமைந்துள்ள கொக்கல ஏரியில் உள்ள தலத்துடுவ மற்றும் குருலுடுவ தீவுகளில் சதுப்புநில வாழ்விட மறுசீரமைப்பை INSEE Cement ஆரம்பித்திருந்தது. இலங்கையின் ஈரநில சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை வலுப்படுத்த INSEE தன்னார்வலர்கள், ஹபராதுவ தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழலியல் ஆர்வலர்கள் அணியுடன் ஒரு முன்னோடி செயற்திட்டத்தை ஏற்பாடு செய்ததிலிருந்து, 4,500 க்கும் மேற்பட்ட சதுப்புநில தாவரங்கள் மீளவும் வளர்க்கப்பட்டுள்ளன.

INSEE Cement இன் மற்றொரு குறிப்பிடத்தக்க முயற்சியானது உனவட்டுன பவளப்பாறை மறுசீரமைப்பு செயற்திட்டமாகும், இது தெற்கு பவள படுக்கையை வலுப்படுத்தவும் பவளப் பரவலை ஊக்குவிக்கவும் செயற்கை கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த செயற்திட்டம், குறைந்தது 25 புதிய பவள காலனிகளை இயற்கையாக ஸ்தாபிப்பதற்கு உதவியது. 2019 ஆம் ஆண்டில், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ரோட்டறிக் கழகம் மற்றும் இலங்கை கடற்படையுடன் இணைந்து, பவளப் படுக்கைகளை வலுப்படுத்தவும், பவளப் பரவலை மிகவும் பேண்தகமை கொண்ட வழிமுறையில் ஊக்குவிக்கவும் முலாமிடப்பட்ட உருக்கு கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கன்னெலிய வன இடையக வலயத்தின் சீரழிந்த பகுதியை மீட்டெடுப்பதற்காக INSEE Cement நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் Biodiversity Sri Lanka மற்றும் ஏனைய பொறுப்புணர்வுமிக்க வர்த்தக நிறுவனங்களுடன் கைகோர்த்திருந்தது. கொவிட்-19 தொற்றுநோய் அடங்கலாக பல சவால்கள் இருந்தபோதிலும், காட்டுத் தீ அபாயத்தைத் தணிக்க 15,000 தாவரங்கள் காட்டுத்தீ வளையம் மூலம் இந்த வாழ்விடத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு முயற்சியை விரைவுபடுத்துவதற்காக அங்கே ஒரு தள வளர்ப்பிடமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மணிப் புறாக்கள் (கூடு), பழுப்பு நிற கீச்சான் குருவிகள் (உருவகங்கள்) மற்றும் நீண்டவால் பக்கிகள் (நிரந்தர பறவைகள் எண்ணிக்கை நிறுவப்பட்டது) உள்ளிட்ட பல பறவைகளை மீட்டெடுத்துள்ளதன் மூலம் இந்த செயற்திட்டத்தின் வெற்றி சான்று பகருகின்றது.

“INSEE Cement ஒருபோதும், அதுவும் குறிப்பாக உலக அளவில் அவசர நடவடிக்கை எடுக்கப்பட சந்தர்ப்பங்களின் போது பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பிலிருந்து விலகிச் செல்லவில்லை,” என்று INSEE Cement – Sri Lanka நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான குஸ்டாவோ நவரோ அவர்கள் கருத்து வெளியிட்டார். “எங்கள் வணிகத்தின் இயல்பில் எப்போதுமே மிக உயர்ந்த, மிகக் கடுமையான சுற்றுச்சூழல் தராதரங்களுடன் இணங்கிப்போக வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்படையக்கூடிய எமது சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை மறுசீரமைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் மிக நீண்ட கால, மகத்தான நற்பேறை உருவாக்க எங்கள் வளங்களையும் செல்வாக்கையும் பயன்படுத்தியுள்ளோம். இந்த ஆண்டு, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் தசாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்து நிற்கையில், INSEE Cement காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், பல்லுயிர் வீழ்ச்சியை நிறுத்துவதற்கும், நமது மிக அடிப்படையான சுற்றுச்சூழல் கட்டமைப்பான நாம் செயற்படும் சமூகங்கள் மத்தியில் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்புடனான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.  

INSEE Cement Sri Lanka தொடர்பான விபரங்கள்

INSEE Cement நிறுவனமானது, INSEE சங்ஸ்தா, INSEE மகாவலி மெரின் பிளஸ், INSEE ரெபிட் ஃபுளோ பிளஸ் மற்றும் INSEE எக்ஸ்ட்ரா சீமெந்து போன்ற அதிசிறந்த கலவை சீமெந்து தயாரிப்புக்களை உற்பத்தி செய்து வருகின்றது. இலங்கை பசுமை கட்டிட சபையிடமிருந்து பசுமை அடையாள சான்று அங்கீகாரத்தைப் பெற்ற முதல் ‘பசுமை சீமெந்து தயாரிப்பு’ INSEE சங்ஸ்தா ஆகும். இந்த நிறுவனம் இலங்கையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரேயொரு சீமெந்து உற்பத்தி நிறுவனமாகும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply