SDB வங்கி 2025ன் 2ம் காலாண்டில் நெகிழ்திறன் மிக்க பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளது

Share with your friend

தனித்துவமான ஆணையுடன், முற்போக்கான அபிவிருத்தி வங்கியாகத் திகழ்ந்து வருகின்ற SDB வங்கி, நிதியியல் ரீதியாக அனைவரையும் அரவணைத்தல், கூட்டுறவு விழுமியங்கள், மற்றும் டிஜிட்டல் புத்தாக்கம் ஆகியவற்றின் இடைமுகமாக தனது ஸ்தானத்தை தொடர்ந்தும் பேணி வருகின்றது. சமூக மற்றும் கூட்டுறவு வங்கிச்சேவையின் வங்கிச்சேவை கோட்பாடுகளில் ஆழமாக வேரூன்றியுள்ள இவ்வங்கி, குறிப்பாக பெண் தொழில்முனைவோர், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், மற்றும் கிராமப்புற மக்கள் உள்ளிட்ட பின்தங்கிய சமூகங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருவதுடன், டிஜிட்டல் மார்க்கங்கள் மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட தீர்வுகள் ஆகியவற்றினூடாக தனது வீச்சினை விரிவுபடுத்தி வருகின்றது. நிலைபேற்றியல், சமூக விளைவு, மற்றும் அனைவரையும் அரவணைக்கும் நிதி வசதி ஆகியவற்றில் அதன் மூலோபாய கவனத்துடன், இலங்கையில் மிகுந்த அளவில் நோக்கம் சார்ந்து பயணிக்கும் நிதி நிறுவனங்களில் ஒன்றாக SDB வங்கி சீராக வளர்ச்சி கண்டுள்ளது.    

தேசத்தின் சவால்மிக்க பொருளாதார சூழலுக்கு மத்தியிலும், 2025ன் முதற்பாதியில் ரூபா 156 மில்லியன் என்ற வரிக்குப் பின்னரான இலாபத்தைப் பதிவாக்கியுள்ள SDB வங்கி, தனது நெகிழ்திறன் மிக்க பெறுபேறுகளை பிரதிபலித்துள்ளது. தேறிய கட்டண வருமானத்தில் கடந்த ஆண்டிலிருந்து நடப்பு ஆண்டுக்கு என்ற அடிப்படையில் 32% அதிகரிப்பை வங்கி பதிவாக்கியுள்ளதுடன், முன்முயற்சிகளுடனான பிரதிபலன் மற்றும் நிதி வழங்கல் செலவு முகாமைத்துவம் ஆகியவற்றின் துணையுடன் தேசிய வட்டி இலாப மட்டம் 2025 ஜுனில் 5.64% ஆக உயர்வடைந்துள்ளது. கணிசமான அளவில் மூலதன மற்றும் திரவத்தன்மை மட்டத்தைப் பேணியுள்ள SDB வங்கி, இக்காலாண்டின் முடிவில் 15.26% மொத்த மூலதன போதுமை விகிதம் மற்றும் 281.52% திரவத்தன்மை காப்பு விகிதம் ஆகியவற்றையும் பதிவாக்கியுள்ளது,    

2025ன் 2ம் காலாண்டில் 5% என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, ஜுன் மாதத்தில் -0.6% என்ற வருடாந்த முகப்பு பணமதிப்பிறக்கம், மற்றும் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையாக அதிகரித்தமை ஆகியவற்றுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார மீட்சி சீராக வளர்ச்சி கண்டு வருகின்ற சூழலில் மீளாய்வு செய்யப்படும் காலப்பகுதியும் ஒன்றியுள்ளது. தற்போது இடம்பெற்று வருகின்ற நிதி மற்றும் நாணய மறுசீரமைப்புக்களுடன், நாட்டின் பொருளாதாரத்தில் இடம்பெற்று வருகின்ற மேம்பாடுகள், வங்கியின் தொழிற்பாடுகளுக்கு பக்கபலமாக அமைந்துள்ளதுடன், மேம்பட்ட கடன் வழங்கல் வாய்ப்புக்கள், டிஜிட்டல் வளர்ச்சி, மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஆகியவற்றுக்கு பங்களித்துள்ளது.     

அதிகரித்த பணியாளர் செலவுகள் காரணமாக கடந்த ஆண்டிலிருந்து நடப்பு ஆண்டுக்கு என்ற அடிப்படையில் தொழிற்பாட்டுச் செலவினங்கள் 6% ஆல் அதிகரித்துள்ளன. தக்க வைக்கப்பட்டுள்ள வசூல் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளின் உந்துசக்தியுடன் 2024ன் 2ம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 18% ஆல் குறைவடைந்துள்ள மதிப்பிறக்க கட்டணங்கள் தொழிற்பாட்டுச் செலவினங்களின் அதிகரிப்பை ஈடுகட்டியுள்ளன. கட்டம் 3 கடன்களுக்கான மதிப்பிறக்க காப்பு விகிதம் 2024 ஆண்டு முடிவில் காணப்பட்ட 47.78% இலிருந்து மேம்பட்டு, 2025ன் 2ம் காலாண்டில் 49.84% ஆக பதிவாக்கப்பட்டுள்ளமை, விவேகமான இடர் முகாமைத்துவ ஏற்பாடுகளைப் பிரதிபலிக்கின்றது.       

ஐந்தொகையில் வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முற்பணம் 2024 டிசம்பரிலிருந்து ரூபா 3.9 பில்லியன் தொகையால் அதிகரித்துள்ளன. பிரதானமாக, குறுகிய கால கடன்களை திருப்பிச் செலுத்துதல் மற்றும் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்பு அதிகரிப்பு காரணமாக முதற்பாதியில் ஒட்டுமொத்த சொத்துக்கள் 1% ஆல் குறைவடைந்துள்ளன. தனது நிதி வழங்கல் கட்டமைப்பு உச்சப்பயனாக்கம் செய்து, செலவு கூடிய கடன்களில் தங்கியிருப்பதைக் குறைத்து, மற்றும் தனது செலவு குறைந்த சேமிப்புக்கள் தளத்தை வளர்ச்சி பெறச் செய்யும் வங்கியின் திட்டமிட்ட மூலோபாயத்துடன் இது ஒன்றியுள்ளது.      

இப்பெறுபேறுகள் குறித்து SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன அவர்கள் கருத்து தெரிவிக்கையில்: “சவால்மிக்க சந்தையில் எம்மைத் தொடர்ந்தும் தகவமைத்து வந்துள்ளதுடன், எமது அடிப்படைகளின் பலத்தை 2ம் காலாண்டு பெறுபேறுகள் பிரதிபலிக்கின்றன. விவேகமான இடர் முகாமைத்துவத்துடன், இலக்கு வைக்கப்பட்ட வளர்ச்சி மூலோபாயங்களை முன்னெடுத்துச் செல்வதனூடாக எமது வாடிக்கையாளர்கள் மற்றும் எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் நாம் தொடர்ந்தும் மதிப்பை வழங்குவதுடன், இலங்கையில் அனைவரையும் அரவணைக்கின்ற, மற்றும் நிலைபேணத்தக்க பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் எமது வகிபாகத்தை நாம் வலுப்படுத்தி வருகிறோம்.”  தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட நிதித் தீர்வுகள் மூலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதில் SDB வங்கி தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளதுடன், அடிமட்ட பொருளாதாரச் செயற்பாடுகளை வலுப்படுத்தி, மற்றும் அனைவரையும் அரவணைக்கும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதேசமயம், பரிணாம மாற்றம் கண்டு வருகின்ற சந்தை சூழ்நிலைகளைக் கடந்து செல்லத் தேவையான நெகிழ்திறன் மற்றும் ஸ்திரத்தன்மையையும் சிறப்பாகப் பேணி வருகிறது.  


Share with your friend