இலங்கையின் வட பிராந்தியத்தில் காணப்படும் மிகவும் மோசமாக பிளாஸ்ரிக் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள இரு மீன்பிடி கரையோரப் பகுதிகளான குருநகர் மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, Clean Ocean Force உடன் கைகோர்த்துள்ளது.
வட மாகாணத்தில் பிளாஸ்ரிக் கழிவுகளை தினசரி தூய்மைப்படுத்தல் பணிகளை முன்னெடுப்பதற்காகவும், சமூக விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை பேணுவதற்காக Clean Ocean Force உடன் கைகோர்த்துள்ள முதலாவது கூட்டாண்மை நிறுவனமாக ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி திகழ்கின்றது. இந்தப் பணிகள் இரு கட்டங்களில் இடம்பெறும். மிதக்கும் பிளாஸ்ரிக், PET மற்றும் இதர கழிவுகளை அகற்றுவது மற்றும் இயந்திரங்கள் மற்றும் மனித ஊழியர்களை பங்கேற்கச் செய்து, கீழ்ப் பகுதியில் காணப்படும் பிளாஸ்ரிக்களை அகற்றுவது அவையாகும். இந்தத் திட்டத்தினூடாக சமூக பரம்பல் மற்றும் ஈடுபாட்டை ஏற்படுத்தி, யாழ்ப்பாண பிராந்தியத்தை பிளாஸ்ரிக் கழிவுகளிலிருந்து விடுபடச் செய்து, வதிவோரின் ஈடுபாட்டுடன் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் பெருமளவான அபிவிருத்திச் செயற்பாடுகள் காரணமாக, பிளாஸ்ரிக் கழிவுகள் என்பது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. யாழ்ப்பாண குடா பகுதியினுள் பிளாஸ்ரிக் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குருநகர், பாசையூர் மற்றும் கச்சாய் போன்ற பகுதிகள் PET மற்றும் ஒற்றைப் பாவனை பிளாஸ்ரிக்கள் மற்றும் பொலிதீன் போன்றவற்றால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. கரையோரப் பகுதிகளில் இவை அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் மக்களினதும் கடல்வாழ் உயிரினங்களினதும் வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வட மாகாண உள்ளூராட்சி சபை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) ஆகியவற்றுடன் Clean Ocean Force முத்தரப்பு உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை வட மாகாண ஆளுநர் மேற்பார்வை செய்கின்றார். இந்தத் திட்டத்தில் கைகோர்த்துள்ள இதர பங்காளர்களாக மத்திய சூழல் அதிகார சபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை பொலிஸ் சூழல் பிரிவு, வட மாகாண சுற்றுலா பணியகம், இலங்கை பொலிஸ் கரையோரம் மற்றும் சுற்றுலாப் பிரிவு மற்றும் இதர பல தன்னார்வ அமைப்புகள் இணைந்துள்ளன.
1948 ஆம் ஆண்டு எளிமையான நோக்கத்துடன் ஹேமாஸ் நிறுவப்பட்டது: குடும்பங்கள் ஆரோக்கியமான வாழ்வதற்கு உதவுவது என்பது அந்த நோக்கமாகும். இந்த அடிப்படை நம்பிக்கையானது, 70 வருட காலமாக நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உயிரூட்டியிருந்தது. இன்று, நாம் எமது நுகர்வோர் வர்த்தக நாமங்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் நடமாடல் தீர்வுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்த முடிந்துள்ளது. இலங்கையின் சமூக-பொருளாதார கட்டமைப்புடன் பிணைந்துள்ள ஹேமாஸ், பிராந்தியத்தில் பங்களாதேஷுக்கும் தனது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளது. எமது பயணத்தில், பன்முகப்படுத்தப்பட்ட ஆர்வமுள்ள அணியினரில் நாம் முதலீடுகளை மேற்கொள்வதுடன், அர்த்தமுள்ள சேவை வழங்கல்களை உருவாக்குவது, நம்பிக்கையை வென்ற பங்காண்மைகளை ஊக்குவிப்பது மற்றும் உள்ளடக்கமான உலகை கட்டியெழுப்பி, சகல பங்காளர்களுக்கும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவோம்.
Clean Ocean Force என்பது இலாப நோக்கற்ற நிறுவனமாகத் திகழ்வதுடன், பிளாஸ்ரிக், மனிதர்களால் உருவாக்கப்படும் கழிவுகள் மற்றும் கழிவுகளை இலங்கையின் கடற்கரைகளிலிருந்து இல்லாமல் செய்வதை நோக்கி செயலாற்றும் அமைப்பாகவும் அமைந்துள்ளது.