GIZ மற்றும் GLX இணைந்து சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சிகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்க “GLX Digital Evolver” திட்டம் அறிமுகம்

Share with your friend

இலங்கையின் பிரயாணம் மற்றும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த சிறிய நடுத்தரளவு வியாபாரங்களுக்கு டிஜிட்டல் பிரிவில் வளர்ச்சியடைவதற்கு அவசியமான வலுவூட்டல்களை வழங்கும் வகையில் “GLX Digital Evolver” எனும் திட்டத்தை முன்னெடுப்பதற்காக Good Life X (GLX) மற்றும் GIZ ஸ்ரீ லங்கா ஆகியன கைகோர்த்துள்ளன. இந்நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. தொற்றுப் பரவலுடனான காலப்பகுதியில் டிஜிட்டல் பிரசன்னத்தை கோரும் உலகில் உறுதியான மீட்சியுடன் வளர்ச்சியை எய்துவதற்கு ஊக்குவிப்பை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான நிதியுதவியை பொருளாதார கூட்டிணைவு மற்றும் அபிவிருத்திக்கான ஜேர்மன் பெடரல் அமைச்சு (BMZ) வழங்கியிருந்தது.

தெரிவு செய்யப்பட்ட 10 இறுதிப் போட்டியாளர்களான Gileemale Retreat, Summer Explorers Pvt Ltd, EcoGrip, The Travel Concierge Pvt Ltd, Rediscover Sri Lanka, Detroves Travels, Nandana Tea Factory, Eco Team – Sri Lanka Pvt Ltd, Infinity Vacations மற்றும் Jungle Beach Camp Ahungalla ஆகியன துறையின் பல நிபுணர்களுடன் இணைந்து செயலாற்றி, அடுத்த மூன்று (3) மாதங்களில் முன்னேற்றத்துக்கான வியாபார வாய்ப்புகளை இனங்காணும். GLX Digital Evolver திட்டம் என்பது, ஒவ்வொரு வியாபாரத்தினதும் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி எனும் பகிரப்பட்ட இலக்குகளை எய்துவதை நோக்கி செயலாற்றும். இதில், இலக்கு வைக்கப்படுவோரை சென்றடைவதற்கு அவசியமான திறன் கட்டியெழுப்பல், app வடிவமைப்பு, சமூக ஊடக விரிவாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் ஆகக்குறைந்த நிதி இருப்புகளை பயன்படுத்தி இணையத்தள வடிவமைப்பு போன்றன மேற்கொள்ளப்பட்டு தேவையான பொருளடக்கங்கள் ஊக்குவிக்கப்படும்.

GLX Digital Evolver நிகழ்ச்சித்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இறுதிப் போட்டியாளர்கள் பத்துப் பேருடனான மெய்நிகர் சந்திப்பு.

Good Life இன் ஸ்தாபக பிரதம நிறைவேற்று அதிகாரி ரந்துலா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “நெருக்கடியான காலப்பகுதியில் பல சவால்களுக்கு முகங்கொடுத்த வண்ணம் தமது பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் சிறியளவிலான செயற்பாட்டாளர்களை இலக்காகக் கொண்டு Digital Evolver திட்டத்தை வடிவமைத்திருந்தோம். சிறந்த பெறுபேறுகளை நோக்கி, புத்தாக்கத்தை உள்வாங்கி, புரட்சிகரமான மாற்றங்களை நோக்கி அவர்களுடன் இணைந்து பயணிப்பது என்பது பெருமையான விடயமாக அமைந்துள்ளது.” என்றார்.

2021 மே மாதம் 10 ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பிக்கப்பட்டதுடன், பிரயாணம் மற்றும் சுற்றுலா துறையைச் சேர்ந்த சிறிய நடுத்தரளவு வியாபாரங்களிடமிருந்து எண்பதுக்கும் (80) அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக அவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் வியாபாரத்தின் அளவு, வியாபிப்பு மற்றும் வழங்கப்படும் சேவைகள் என்பதைப் பொறுத்து தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இருபது (20) விண்ணப்பதாரிகளை தெரிவு செய்யும் முறையில் GLX, GIZ மற்றும் Pascal Gavotto (CEO, Fatumaru Consulting) மற்றும் நவீன் மாரசிங்க (COO, Antyra Solutions) ஆகியோரைக் கொண்ட நிபுணர் குழுவினர் முன்னிலையில் நேர்காணல் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வியாபாரத்தின் சட்ட உரிமைநிலை, அவற்றினால் வழங்கப்படும் தீர்வுகளின் பிரத்தியேகத்தன்மை, நிலைபேறான செயற்பாடுகள் மற்றும் வழிமுறைகள், சூழலை பாதுகாப்பது தொடர்பில் அவர்களின் கவனம், சமூகங்களுக்கு வழங்கப்படும் நேர்த்தியான பங்களிப்பு மற்றும் தொற்றுப் பரவலின் போது மீட்சியுடன் திகழ்வதற்காக அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள புத்தாக்கமான வழிமுறைகள் போன்றவற்றின் அடிப்படையில் நிகழ்ச்சித் திட்டத்தின் பத்து (10) இறுதிப் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கையின் பிரயாணம் மற்றும் சுற்றுலாத் துறையில் எதிர்பாராத பல சவால்களை கொவிட்-19 தோற்றுவித்திருந்தது. இதற்கு முகங் கொடுக்கக்கூடிய வகையில் GLX Digital Evolver நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக, பங்குபற்றுநர்களுக்கு தொற்றுப் பரவலின் போது தமது வியாபாரங்களை விரிவாக்கிக் கொள்வதற்கு அவசியமான டிஜிட்டல் பகுதிகளையும் அவசியமான சாதனங்களையும் வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது. GIZ இன் இலங்கைக்கான பணிப்பாளர் கிறிஸ்டின் ஐன்ஃபெல்ட் குறிப்பிடுகையில், இந்தத் திட்டத்தில் அங்கம் வகிப்பதையிட்டு GIZ மகிழ்ச்சியடைகின்றது. இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தொழிற்துறைக்கு அவசியமான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நிலைபேறான தீர்வுகளை வழங்க முடிந்துள்ளமை மகிழ்ச்சியூட்டுகின்றது என்றார். 

இலங்கையிலுள்ள ஆரம்பநிலை நிறுவனங்கள் மற்றும் முதிர்ச்சியடைந்த நிறுவனங்களுக்கு தமது தயாரிப்புகளை மேம்படுத்திக் கொள்வது, உள்ளக மற்றும் வெளியக செயன்முறைகளை மேம்படுத்திக் கொள்வது, பிராந்தியங்கள் மற்றும் ஏனைய கண்டங்களைச் சேர்ந்த நாடுகளுக்கு தமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விஸ்தரித்துக் கொள்வதற்கு அவசியமான ஆதரவுகளை GLX வழங்குகின்றது. 2019 ஆம் ஆண்டு முதல் GLX தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், உணவு, அலங்கார வடிவமைப்பு, பிரயாணம் மற்றும் ஆரோக்கியம் போன்ற துறைகளில் வியாபாரங்கள் மற்றும் வர்த்தக நாமங்களைக் கட்டியெழுப்புவதில் பணியாற்றுகின்றது. மாதிரித் திட்டமாக 2018 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட GLX, உணவு, விவசாயம், அலங்கார வடிவமைப்பு, ஆரோக்கியம் மற்றும் சுற்றுலாப் பிரிவுகளில் நிலைபேறான உள்நாட்டு ஆரம்பநிலை நிறுவனங்கள் மற்றும் சிறிய நடுத்தரளவு வியாபாரங்களை மேம்படுத்துவதில் கொண்டுள்ள தனது ஆழமான அனுபவம் மற்றும் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு செயலாற்றுகின்றது. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த நாற்பதுக்கும் (40) அதிகமான நிறுவனங்களுடன் GLX பணியாற்றுகின்றது.

The Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH 1956 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்திப் பங்காளராக பணியாற்றுகின்றது. இலங்கையின் நல்லிணக்க செயன்முறைகளுக்கு உதவும் திறன்கள், நிறுவனசார் செயன்முறைகள் மற்றும் அமைப்புக்களைக் கட்டியெழுப்புதல், யுத்தத்துக்கு பின்னரான தனியார் துறை அபிவிருத்தி, தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான பயிற்சிகளை வழங்கல், மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளை தவிர்த்துக்கொள்வதற்காக இயற்கை வளங்களை புத்தாக்கமான முறையில் நிர்வகித்தல் போன்றவற்றை GIZ தொடர்ச்சியாக மேற்கொண்டவண்ணமுள்ளது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply